கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஆனைப்பந்தி அருள்மிகு ஸ்ரீசித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் தேரோட்டம் இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பழமையானதும் பிரசித்திபெற்றதுமான ஆனைப்பந்தி அருள்மிகு ஸ்ரீசித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 14ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமானது.
ஆலயத்தின் பிரம்மோற்சவமானது 10 தினங்கள் நடைபெற்றுவரும் நிலையில் 21ஆம் திகதி நேற்று திருவேட்டை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய தினம் காலை தம்பபூஜை, மூலவர் அபிசேகம் மற்றும் விசேட பூஜைகள் நடைபெற்று வசந்த மண்டப அலங்கார பூஜை சிறப்பாக நடைபெற்றதுடன் நாட்டிய நிகழ்வும் நடைபெற்றது.
வசந்த மண்டபத்தில் பஞ்சமுக கணபதிப்பு விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து சுவாமி ஊர்வலமாக தேரடிக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
இதன்போது சித்திரத்தேரில் அமர்ந்த பஞ்சமுக கணபதிக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து ஆண்கள்,பெண்கள் என வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும் தொழிலதிபருமான தேசபந்து செல்வராசா மற்றும் பிரபல தொழிலதிபர் தீசன் ஆகியோர் இணைந்து பந்தர்களுக்கு தாக சாந்தியும், அண்ணதானமும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.