நடராஜனின் உழைப்பு அங்கீகரிக்கப்படுவதில்லை..

தமிழக வீரர் நடராஜன் மிகப்பெரிய கடின உழைப்பாளி என்று ஐதராபாத் அணியின் அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் பாராட்டியுள்ளார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இந்த போட்டியில் வென்றதன் மூலமாக ஐதராபாத் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கிட்டத்தட்ட பாதி சீசனின் முடிவிலேயே ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டெல்லி – ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மொத்தமாக 465 ரன்கள் விளாசப்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெறும் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார் நடராஜன். இதுகுறித்து ஐதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார் பேசுகையில், மிகப்பெரிய இலக்கை அணிகள் சேஸிங் செய்யும் போது, எங்கள் பவுலிங்கிலும் ரன்கள் விளாசப்படும் என்பது தெரியும்.

ஆனால் எங்களின் திட்டத்தை சரியாக செயல்படுத்த வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. நடராஜனின் யார்க்கர் பந்துகள் குறித்து அனைவருக்கும் நன்றாக தெரியும். அவர் எப்போதும் அமைதியாக இருப்பார். ஆனால் கடின உழைப்பாளி. சில நேரங்களில் அவரின் உழைப்பு அங்கீகரிக்கப்படுவதில்லை. நிச்சயம் மிகப்பெரிய மேட்ச் வின்னர் அவர். அதேபோல் சில ஆண்டுகளுக்கு பின் எங்களின் பேட்டிங் சிறப்பாக அமைந்துள்ளது.

பவுலிங்கில் நாங்கள் கொஞ்சம் நிம்மதியாக உள்ளோம். இந்த மைதானத்தில் 200 முதல் 220 ரன்கள் என்பது மிகவும் குறைவானதுஇ என்று நினைத்திருந்தோம். அதற்கேற்றபடி பேட்ஸ்மேன்கள் ஒரு குழுவாக சிறப்பாக விளையாடினார்கள். என்னை பொறுத்தவரை பிட்ச், சூழல் எதையும் பெரிதாக யோசிக்க தேவையில்லை. மீண்டும் ஒரே விஷயத்தை செய்ய வேண்டும். வலைப்பயிற்சியிலும் அப்படித்தான் செயல்படுகிறோம்.

வலைப்பயிற்சியில் பவுலிங் செய்யும் போது பந்து எந்த பக்கம் போகிறது என்று பார்க்க தேவையில்லை. குறிப்பாக ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவருக்கும் பவுலிங் செய்யும் போது நமது பால் எங்கு செல்கிறது என்பதை கண்டுகொள்ள கூடாது. அதாவது, பேட்ஸ்மேன்கள் ஸ்பான்சர்ஷிப்பை வென்று கொடுப்பார்கள். ஆனால் பவுலர்கள் தான் சாம்பியன்ஷிப்பை வென்று தருவார்கள் என்று சிறந்த வார்த்தைகள் சொல்லி இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *