உலகில் மிகவும் பிரபலமான அன்னாசிப் பழ வகைகளில் ஒன்றான எம்டி2 அல்லது சுபர் ஸ்வீட் பைன் அபல் (அனாநஸ் கொமோஸஸ்) இன அன்னாசியை இலங்கையில் பயிரிடுவதற்கு உடனடியாகப் பரிந்துரைக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாயத் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எம்டி2 அன்னாசி வகைக்கு உலக சந்தையில் அதிக கேள்வி காணப்பட்டாலும் அவ்வன்னாசி வகையை இலங்ககையில் பயிரிட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வன்னாசி இனம் இனிப்புச் சுவையுடன் அமிலத் தன்மை குறைந்ததாகக் காணப்படுகின்றது.
அத்துடன் அதன் நிறம், சுவை, வடிவம், ஆயுட்காலம் மற்றும் பழுத்த தன்மை காரணமாக சர்வதேச சந்தைக்கான தரத்தில் உற்பத்தியாகின்றன.
இவ்வகை அன்னாசிப்பழத்தின் வர்த்தக செய்கையை 1996 இல் மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டதுடன் மலேசிய நாட்டில் பிரதான ஏற்றுமதி பழ வகைகளில் முதன்மை வகிக்கின்றன.
இதனைப் பயிரிடுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விவசாய அமைச்சுத் தெரிவித்துள்ளது.
எனவே சுதந்திரப் பயிர்ச் செய்கைக் குழுவின் பரிந்துரையின் கீழ் விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கையில் பயிரிடுவதற்கு இந்த எம்டி2 அன்னாசி வகையைப் பரிந்துரைக்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு விவசாயத் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
விவசாயத்துறை நவீனமயமாக்கல் வேலைத் திட்டத்தின் கீழ் இலங்கையின் எம்டி2 அன்னாசியைப் பயிரிடுவதற்கான ஆராய்ச்சி வெற்றியடைந்துள்ளதாகவும், விவசாயிகளும் இந்த அன்னாசியைப் பயிரிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டார்.