ரூபாய் 47 கோடி மதிப்புள்ள வீரர்களை எதற்கும் பயன்படுத்தாமல் பெஞ்சில் உட்கார வைத்து விட்டதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சிஎஸ்கே முன்னாள் வீரர் கடுமையாக கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவு வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது
விராட் கோலி, மேக்ஸ்வெல், முகமது சிராஜ், டூப்ளசிஸ் உள்ளிட்ட t20 ஸ்பெசலிஸ்ட் ஆட்டக்காரர்களை உள்ளடக்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வி அடைந்து பாயிண்ட்ஸ் டேபிளில் கடைசி இடமான பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.
இதனால் அந்த அணியின் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக நேற்று நடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் பௌலிங் படு மோசமாக இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 262 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் பெங்களூரு அணியில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட முக்கிய ஆட்டக்காரர்கள் இடம்பெறவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இது தொடர்பாக சென்னை அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் தனது எக்ஸ் பக்கத்தில், 17.5+11.5+11+7 கோடி ரூபாய் மதிப்புள்ள வீரர்கள் பெஞ்ச்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளனர் என்று விமர்சித்துள்ளார்.
அபினவ் முகுந்த்தின் இந்த பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த ஐபிஎல் தொடரில் கேமரூன் கிரீனை ரூ. 17.5 கோடிக்கும், அல்ஸாரி ஜோசப்பை 11.5 கோடி ரூபாய்க்கும், மேக்ஸ்வெல்லை ரூ. 11 கோடிக்கும், முகமது சிராஜை ரூ. 7 கோடிக்கும் விலைக்கு வாங்கியது.
இவர்கள் யாரும் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் 10 ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.