கிளிநொச்சி மாவட்டத்தில் கிராமிய பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(19) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில் காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.
இந் நிகழ்வில், கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இதன்போது விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட 05 பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி தெற்கு பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர், மாவட்ட விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள், அதிபர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.