18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. முதல் கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இருக்கும் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு எதுவாக அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சரியாக 7 மணிக்கு தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.
திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் குமார் காலை 7 மணிக்கு முன்னரே வாக்குச்சாவடிக்கு வருகை தந்து காத்திருந்தார். சரியாக 7 மணிக்கு முதல் நபராக தனது வாக்கினை செலுத்தினார் நடிகர் அஜித் குமார். எப்போதும் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களிக்கும் அஜித் இந்த முறை தனியாக வந்து வாக்களித்தார். திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு நடிகர் அஜித் வருவார் என்பதை அறிந்த அஜித் ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.
அஜித் தனது வாக்கினை செலுத்திவிட்டு திரும்பும் போது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் நடிகர் அஜித் குமாரை வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பாதுகாப்புடன் அவரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.