களத்தில் ஒற்றை ஆளாக போராடிய தினேஷ் கார்த்திக்

நடப்பு IPL சீசனின் 30ஆவது லீக் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின.

இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 25 ஓட்டங்களில்வெற்றி பெற்றது. RCB அணிக்காக ஒற்றை ஆளாக களத்தில் வெற்றிக்காக போராடி இருந்தார் தினேஷ் கார்த்திக்.

பெங்களூரு எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற RCB துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 287 ஓட்டங்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். கிளாசன் அரைசதம் கடந்தார். அபிஷேக் சர்மா, எய்டன் மார்க்ரம், அப்துல் சமாத் ஆகியோர் 30+ ஓட்டங்களை கடந்தனர். ஃபெர்குசன் (2) மற்றும் ரீஸ் டாப்லே (1) விக்கெட் வீழ்த்தினர்.

288 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆர்சிபி விரட்டியது. கோலி மற்றும் கேப்டன் டூப்ளசி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 80 ஓட்டங்கள் எடுத்தனர். கோலி, 20 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து மயங்க் மார்க்கண்டே சுழலில் போல்ட் ஆனார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் துரதிர்ஷ்டவசமாக நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் ரன் அவுட் ஆனார். டூப்ளசி நேராக ஆடிய பந்தை அப்படியே லாவகமாக நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த ஸ்டம்ப் பக்கமாக தட்டி விட்டார் உனத்கட். அது ஸ்டம்பை தகர்க்க வில் ஜேக்ஸ் அவுட் ஆனார்.

ரஜத் பட்டிதார், டூப்ளசி, சவுரவ் சவுகான் ஆகியோர் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். பின்னர் லோம்ரோர் மற்றும் தினேஷ் கார்த்திக் இணைந்து 59 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். லோம்ரோரை 19 ஓட்டங்களில் வெளியேற்றினார் கம்மின்ஸ்.

சிறப்பாக பேட் செய்த தினேஷ் கார்த்திக், 35 பந்துகளில் 83 ஓட்டங்கள் விளாசினார். 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். RCB அணிக்காக ஒன் மேன் ஆர்மியாக களத்தில் செயல்பட்டார் டிகே. 19ஆவது ஓவரில் அவரை அவுட் செய்தார் நடராஜன். அவருக்கு அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் உதவியிருந்தால் இலக்கை RCB அணி இன்னும் நெருங்கி செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கும்.

20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 262 ஓட்டங்கள் எடுத்தது RCB .அதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 25 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *