அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் நலனுக்காக முடிந்த அனைத்து நிவாரணங்களையும் அரசாங்கம் வழங்கும் 

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு.

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அரசாங்கத்தினால் முடிந்த அனைத்து நிவாரணங்களும் வழங்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். 

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் (09) நடைபெற்ற ‘போரினால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு மின்சார மோட்டார் சைக்கிள் வழங்கும்” நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

அதன்படி அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 17 மில்லியன் ரூபா செலவில் 50 மின்சார மோட்டார் சைக்கிள்கள் இதன்போது வழங்கப்பட்டன. 

இன்று காலை பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்திற்கு வருகைத் தந்த ஜனாதிபதிக்கு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குனரத்னவினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. 

நிகழ்வில் அடையாள அம்சமாக அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் சிலருக்கு ஜனாதிபதியால் மின்சார சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

இவ்வாறு இராணுவ வீரர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கி ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் தொழில் முயற்சியை மேம்படுத்த முடியுமென இராணுவச் சேவை அதிகாரசபை நம்பிக்கை தெரிவிக்கிறது. 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் ஒருமைப்பாட்டையும், சுயாதீனத் தனைமையையும் பாதுகாக்க உயிரைப் பணயம் வைத்து போராடிய இராணுவ வீரர்களுக்கு நன்றி கூறினார். 

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கான மேலும் 76 மின்சார மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்கான நிதி ஒதுக்குவதாக உறுதியளித்த ஜனாதிபதி, மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இராணுவ வீரர்களின் நலனுக்காக உயர்வான அர்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார். 

மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வின் நிறைவில் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி சவேந்திர சில்வா, முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், இராணுவச் சேவை அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *