மலைநாட்டு நடனக் கலையைப் பாதுகாக்க ஜனாதிபதியினால் குழு நியமிப்பு

மலைநாட்டு நடனக் கலையைப் பாதுகாத்து, தொடர்ந்து பேணுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கலாச்சார அலுவல்கள் அமைச்சு, கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நியமிக்கப்படும் இந்தக் குழுவில் கண்டி பாரம்பரிய நடனக் கலைஞர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக் கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மலைநாட்டு கலை மையமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். 

கண்டி ஜனாதிபதி மாளிகையில் (07) காலை கண்டி பாரம்பரிய நடன கலைஞர்களைச் சந்தித்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். 

கண்டியின் பாரம்பரிய நடனக் கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஆராயுமாறும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆலோசனை வழங்கினார். 

மலைநாட்டு நடனக்கலை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரபல்யமடைந்துள்ள போதிலும் பாரம்பரிய மரபுகளை பின்பற்றாமை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, புதிய குழு அதனை ஆராய்ந்து பொருத்தமான முறையைத் தயாரிப்பதற்கு ஆலோசனை வழங்கும் எனவும் தெரிவித்தார். 

கண்டி பாரம்பரிய நடனக் கலைஞர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, சப்ரகமுவ நடனம் போன்ற இந்நாட்டின் பாரம்பரியக் கலைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். 

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றி அனைத்து மக்களுக்கும் நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்திற்கு கண்டி பாரம்பரிய நடனக் கலைஞர்கள் தமது பாராட்டைத் தெரிவித்தனர். 

இந்நிகழ்வில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *