இலவச அரிசி விநியோக நிகழ்ச்சித் திட்டம் இம்முறையும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளதாகவும் அதற்காக இதுவரை எவ்வித நிவாரண வேலைத் திட்டத்திலும் பங்குபற்றாத நபர்களை உள்ளடக்கியதாகவும் இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
மிகிந்தலை, விளச்சிய, நாச்சியாதுவ உட்பட பல பிரதேசங்களில் அபிவிருத்தி நிகழ்ச்சியை ஆரம்பித்து இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அதற்கிணங்க தற்போது அஸ்வெசும பெறும் மற்றும் அதற்கு விண்ணப்பித்துள்ள நபர்களுக்கும், இதற்கு முன்னர் சமுர்த்திப் பயனாளிகளாக இருந்தும் அஸ்வெசும திட்டம் கிடைக்கப் பெறாதவர்களுக்கும், சிறுநீரக நோய், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி ஆகிய கொடுப்பனவுகளைப் பெறும் நபர்கள் போன்றோருக்கும் இவ்வரிசி வழங்கப்படவுள்ளது.
அதுதவிர இவ்வனைத்து நிவாரண வேலைத்திட்டங்களிலும் கைவிடப்பட்ட நபர்களாயின் அவர்களையும் இத்திட்டத்தில் இணைப்பதற்கான அதிகாரம் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
20கிலோ அரிசி வீதம் இம்முறை தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உரித்தானதுடன் கடந்த தடவை 27.5 இலட்சம் குடும்பங்கள் இந்நிவாரணத்திற்கான தகுதி பெற்றிருந்தன.
எரிபொருள், மின்சாரம் போன்ற சேவைகளுக்காக குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுப் புறத்தில் அரசாங்கத்தின் உதவிகளை பொருத்தமானவர்களுக்கு வழங்குவதற்கே அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.