மட்டக்களப்பு நவீன நூலகத்திற்கான புத்தகங்களை சேகரிக்கும் செயற்பாட்டிற்கு BOOK ABROAD நிறுவனத்தினால் இரண்டாவது தொகுதியாக ஒரு இலட்சம் நூல்கள் கடந்த 02.04.2024 திகதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அதிகளவிலான நூல்களை அன்பளிப்புச் செய்த Book abroad தன்னார்வ தொண்டு அமைப்பிற்கு மட்டக்களப்பு நூலக புத்தக வள ஒருங்கிணைப்பு குழு நன்றிகளை தெரிவிப்பதுடன், இந் நூல் தொகுதி கிடைப்பதற்கு புலம் பெயர் நாட்டில் இருந்து ஒருங்கிணைப்புச் செய்த, நூலகவியலாளர் என்.செல்வராஜாவிற்கும் இப் பாரிய பணியினை நெறிப்படுத்திய கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கும் மட்டக்களப்பு நூலக புத்தக வள ஒருங்கிணைப்பு குழு (Batticaloa Library Book Resource Coordination Panel) சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர். இந் நிகழ்வில் மட்டக்களப்பு நூலக புத்தக வள ஒருங்கிணைப்பு குழு தலைவர் மு.பவளகாந்தன் மற்றும் செயலாளர் சா.பரணீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு கிடைத்த புத்தகங்களில் கல்வி உளவியல், மருத்துவம், தாதியர் கல்வி, கட்டட நிர்மாண பொறியியல், இலத்திரனியல், இயந்திரவியல், நவீன விஞ்ஞானம், விஞ்ஞானக்கல்வி, ஆராய்ச்சி விஞ்ஞானம், விலங்கியல், தாவர விஞ்ஞானம், வணிகம் கலை கலாச்சார, நாடக அழகியல்நுட்பம், குழந்தை உளவியல், கற்றல் கற்பித்தல் உசாத்துணை, பண்டைய, மேலைத்தேய கலாச்சாரம், பெண்கள் நலன் சார்ந்த, இலக்கிய, அறிவியல், பௌதீகவியல் இரசாயனவியல் உயிரியல், புவியியல், விலங்கியல், விவசாய வானியல் சாஸ்திர, கணித, தத்துவ, கோட்பாடுகள், அறிஞர்கள் வரலாறு, ஆய்வுகள் என பல்வேறுபட்ட பிரிவுகளின் கீழ் இந்தப் புத்தகங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இவை நிச்சயம் எமது எதிர்கால மாணவர் சந்ததியை மெருகூட்டி வளப்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.