ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா, நமன் திர், டெவால்ட் ப்ரூவிஸ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் இஷான் கிஷன் 16 ரன்கள் சேர்த்தார்.
3.3 ஓவரில் மும்பை அணி 20 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் தள்ளாடிய மும்பை அணியை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா ஆகியோர் மீட்டெடுக்க முயற்சித்தனர். பாண்ட்யா 34 ரன்களும், திலக் வர்மா 32 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
டிம் டேவிட் 17 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 125 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்னும், ஜாஸ் பட்லர் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 12 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் அஷ்வினுடன் இணைந்த ரியான் பராக் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார். இந்த இணை 4 ஆவது விக்கெட்டிற்கு 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது.
ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரம் மும்பை அணி தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்திருப்பது கவனிக்கத்தக்கது.