டெல்லியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது சென்னை அணி…

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான மேட்ச்சில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணிக்கு இது முதல் தோல்வியாகும்.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் பேட்டிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணியின் பிரித்வி ஷா, டேவிட் வார்னர் முதல் விக்கெட்டிற்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பிரித்வி 43 ரன்களும், வார்னர் 52 ரன்களும் எடுக்க, மிட்செல் மார்ஷ் 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் கேப்டன் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்ததால் ஸ்கோர் எகிறியது. 32 பந்துகளை எதிர்கொண்ட ரிஷப் பந்த் 51 ரன்கள் எடுத்து கம் பேக் கொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 191 ரன்கள் எடுத்துள்ளது.

சிஎஸ்கே தரப்பில் மதீஷா பதிரனா 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியது.

தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன்னிலும், ரச்சின் ரவிந்திரா 2 ரன்னிலும் ஆட்டமிழந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்து இணைந்த அஜிங்யா ரஹானே – டேரில் மிட்செல் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது.

இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மிட்செல் 34 ரன்னிலும், ரஹானே 45 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த சமிர் ரிஸ்வி முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடைசி ஓவர்களில் தோனி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 171 ரன்கள் எடுத்தது. தோனி 37 ரன்களும், ஜடேஜா 21 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணிக்கு இது முதல் தோல்வியாகும். இதேபோன்று 3 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *