பெங்களூருவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 2 போட்டிகளில் தோல்வி அடைந்து பாயிண்ட்ஸ் டேபிளில் 5- ஆவது இடத்திற்கு பின் தங்கி உள்ளது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 59 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்தார்.
முதலில் பார்க்கும் போது இந்த ஸ்கோர் சவாலானதாக இருந்தது. ஆனால் கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ஸ்கோரை விறுவிறுவென உயர்த்தினர். குறிப்பாக கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன் சுனில் நரேன் 22 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரியுடன் 47 ரன்களும் வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை விரைவு படுத்தினர்.
16.5 ஓவரில் 3 விக்கெட் இழந்திருந்த போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி இலக்கை எட்டியது. இதுவரை 2 போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி இரண்டிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியதாவது-
விராட் கோலிக்கு உதவியாக யாருமே விளையாடவில்லை. விராட் கோலியால் தனி ஒரு நபராக எவ்வளவு தான் போராட முடியும்? யாரேனும் ஒரு பேட்ஸ்மேன் அவருக்கு சப்போர்ட்டாக இருந்திருந்தால் அவர் 120 ரன்கள் வரை எடுத்து இருப்பார். கிரிக்கெட் என்பது ஒரு நபர் விளையாட்டு அல்ல. என்று கூறியுள்ளார் பெங்களூரு அணியின் நேற்றைய ஆட்டம் அதன் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.