ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 2 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி இரண்டிலும் தோல்வியடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் களம் இறங்கினர்.
ஜெய்ஸ்வால் 5 ரன்னிலும், ஜாஸ் பட்லர் 11 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்னில் வெளியேறினார். பின்னர் அஷ்வினுடன் இணைந்து பொறுப்பாக விளையாடிய ரியான் பராக், அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார்.
சுழற்பந்து வீச்சாளராக கவனம் பெற்ற அஷ்வின் இந்த மேட்ச்சில் 3 சிக்சர்களை அடித்தது ராஸ்தான் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அவர் 29 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த துருவ் ஜுரெல் 20 ரன்கள் எடுத்தார். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் கடைசி ஓவரில் சிக்சர்களை பறக்க விட்ட ரியான் பராக், 45 பந்துகளில் 6 சிக்சர் 7 பவுண்டரியுடன் 84 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 185 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். மார்ஷ் 12 பந்துகளில் 23 ரன்களும், வார்னர் 34 பந்துகளில் 49 ரன்களும் எடுத்தனர். ரிஷப் பந்த் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.
அணியின் வெற்றிக்காக போராடிய அக்சர் படேல் 23 பந்துகளில் 3 சிக்சர் 2 பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 173 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.