ஐதராபாத் அணிக்கு எதிராக 278 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டிய மும்பை அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் டிராவிஸ் ஹெட் களத்தில் இறங்கினர். மயங்க் அகர்வால் 11 ரன்னில் வெளியேற, அடுத்து இணைந்த ஹெட் – அபிசேக் சர்மா இணை மும்பை பவுலிங்கை சிக்சரும் பவுண்டரியுமாக வெளுத் தெடுத்தது.
பும்ராவை தவிர்த்து மற்ற பந்து வீச்சாளர்களின் ஒவ்வொரு ஓவரிலும் சிக்சர்கள் பறந்ததால் ஐதராபாத் அணி ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். 23 பந்துகளை எதிர்கொண்ட அபிசேக் சர்மா 7 சிக்சர் 3 பவுண்டரியுடன் 63 ரன்களும், டிராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 3 சிக்சர் 9 பவுண்டரியுடன் 62 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கடந்த போட்டியைப் போன்று இந்த மேட்ச்சிலும் வெளுத்து வாங்கிய ஹெய்ன்ரிச் கிளாசன் 34 பந்துகளில் 7 சிக்சர் 4 பவுண்டரியுடன் 80 ரன்கள் குவித்தார். எய்டன் மார்க்ரம் 28 பந்துகளில் 42 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த சன்ரைசர்ஸ் அணி 277 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாக அமைந்தது. இதையடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி வீரர்கள் களம் இறங்கினர்.
ரோஹித் சர்மா 12 பந்துகளில் 26ரன்களும், இஷான் கிஷன் 13 பந்துகளில் 34 ரன்களும் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அதை பயன்படுத்தி அடுத்து வந்த நமன் திர் 14 பந்தில் 30 ரன்களும், திலக் வர்மா 34 பந்துகளில் 64 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
10 ஓவர்களில் மும்பை அணி 140 ரன்களை கடந்ததால் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது. இருப்பினும், 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டிம் டேவிட் 42 ரன்களுடனும், ரொமாரியே ஷெப்பார்ட் 15 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர்.