ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முதல் போட்டியில் பெங்களூருவை வென்ற சென்னை அணி, 2 ஆவது மேட்ச்சில் குஜராத்தை வீழ்த்தி வெற்றி நடை போடுகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு ரச்சின் ரவிந்திரா அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். வெறும் 20 பந்துகளை சந்தித்த அவர் 3 சிக்சர் 6 பவுண்டரியுடன் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அஜிங்யா ரஹானே 12 ரன்கள் சேர்க்க, அடுத்து வந்த சிவம் துபே முதல் 2 பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ருதுராஜ் 36 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
5 சிக்சர், 2 பவுண்டரியுடன் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அசத்தினார் சிவம் துபே. டேரில் மிட்செல் 24 ரன்களும், சமீர் ரிஸ்வி 2 சிக்சருடன் 14 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 206 எடுத்துள்ளது. இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை தொடங்கினர்.
சென்னை அணியின் கட்டுக் கோப்பான பந்து வீச்சுக்கு முன்னால் குஜராத் அணியின் பேட்ஸ்மேன்களால் ரன்கள் குவிக்க முடியவில்லை. கேப்டன் சுப்மன் கில் 8 ரன்னும் ரிதிமான் சாஹா 21 ரன்களும் எடுத்தனர். விஜய் சங்கர் 12 ரன்னில் வெளியேற, அணியின் சரிவை மீட்க டேவிட் மில்லரும், சாய் சுதர்சனும் கடுமையாக போராடினர். இருப்பினும் சென்னை அணியின் வியூகத்தை மீறி இருவராலும் அதிரடியாக விளையாட முடியவில்லை.
சாய் சுதர்சன் 37 ரன்களும், மில்லர் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.