இலங்கை அணி அபார வெற்றி

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் அபார வெற்றியை பெற்று இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1–0 என முன்னிலை பெற்றுள்ளது.

சில்ஹட்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான நேற்று (25) 511 ஓட்ட வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் அணி 49.2 ஓவர்களில் 182 ஓட்டங்களுக்கே சுருண்டது.

இதில் மொமினுல் ஹக் மாத்திரம் ஒரு முனையில் தனித்துப் போராடி 147 பந்துகளில் ஆட்டமிழக்காது 87 ஓட்டங்களை பெற்றார். இலங்கை வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜித்த தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் இரண்டாவது முறையாக இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும் லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முன்னதாக இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 280 ஓட்டங்களை பெற்றதோடு பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 188 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 480 ஓட்டங்களை பெற்றதன் மூலம் பங்களாதேஷுக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.

இதன்போது இலங்கை அணி சார்பில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் 150க்கு மேல் இணைப்பாட்டத்தை பகிர்ந்து கொண்டதோடு இருவரும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்றது இலங்கை அணியின் வெற்றிக்கு உதவியது. இதன்மூலம் தனஞ்சய டி சில்வா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதி சிட்டொக்ராமில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணி பங்களாதேஷிடம் இதுவரை டெஸ்ட் தொடர் ஒன்றை இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *