பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ களத்தில் இறங்கினர். பேர்ஸ்டோ 8 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங்குடன் இணைந்து ஷிகர் தவான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பிரப்சிம்ரன் 25 ரன்னிலும், அவரை தொடர்ந்து தவான் 45 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டோன் 17 ரன்னில் வெளியேறினார்.
சாம் கரன் 23, ஜிதேஷ் சர்மா 27 ரன்கள் சேர்க்க கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சஷாங்க் சிங் 8 பந்தில் 2 சிக்சருடன் 21 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 176 ரன்கள் எடுத்தது.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபிக்கு கேப்டன் டூப்ளசிஸ், கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 3 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான தொடக்கத்தை கொடுத்தனர்.
ரஜத் பட்டிதார் 18 ரன்களும், அனுஜ் ராவத் 11 ரன்களும் எடுத்தனர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் இன்னொரு முனையில் விராட் கோலி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இதனால் தேவைப்படும் ரன்ரேட் ஆர்சிபிக்கு அதிகரிக்காமல் இருந்தது. 49 பந்துகளில் 2 சிக்சர் 11 பவுண்டரியுடன் 77 ரன்கள் எடுத்திருந்தபோது விராட் கோலி ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரி அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். 19.2 ஓவர்களில் பெங்களூரு அணி வெற்றி இலக்கை எட்டியது.