விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். தீவிர அரசியலில் இறங்கிய பின், திரையுலகிலிருந்து அவர் நிரந்தரமாக ஒதுங்கிவிடுவார் என பயந்த ரசிகர்களுக்கு கமலின் முடிவு மகிழ்ச்சி அளித்தது.
கமல் நடிப்பில் இந்தியன் 2, இந்தியன் 3, தக் லைஃப், கல்கி 2898 ஏடி என பல படங்கள் வெளியாக உள்ளன. இவற்றின் நிலை என்ன, எப்போது வெளியாகும் என்பது குறித்து, கமல் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறினார்.
ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தியன் 2, இந்தியன் 3 படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அவர் கூறினார். இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும், அது முடிந்ததும் படம் வெளியாகும் என அவர் தெரிவித்தார். இந்தியன் 3 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. இந்தியன் 2 வெளியீட்டுக்குப் பின் இந்தியன் 3 போஸ்ட் புரொடக்ஷன் முழுவீச்சில் செய்யப்படும்.
பிரபாஸ், அமிதாப்ச்சன், தீபிகா படுகோன் நடித்துள்ள கல்கி 2898 ஏடி படத்தில் கமல் வில்லனாக நடித்திருப்பதாக கூறப்பட்டுவரும் நிலையில், அப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாக கமல் கூறினார். இப்படம் மே 9 ம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வருகிறது.
மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பில் கமல் கலந்து கொண்டார். செர்பியாவில் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு நடந்திருக்க வேண்டும். மக்களவை தேர்தல் கூட்டணி குறித்தப் பேச்சுவார்த்தை இருந்ததால் கமல் இங்கேயே தங்கிவிட, செர்பிய படப்பிடிப்பு தடைபட்டது. தேர்தல் முடிந்ததும், தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதாக கமல் கூறினார்.
இந்தப் படங்களுக்குப் பின், Stunt masters அன்பறிவு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அத்துடன் சிவகார்த்திகேயன், சிம்பு நடிக்கும் படங்களை அவர் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.