ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் லக்னோ 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்திருந்தது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணியால் 20 ஓவர்கள் முடிவில் 173 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து தோல்வியடைந்தது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க பேட்ஸ்மேன்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர்.ஜெய்ஸ்வால் 24 ரன்களிலும் பட்லர் 11 ரன்களிலும் ஆட்டம் இழக்க, அடுத்து வந்த ரியான் பராக் கேப்டன் சஞ்சு சாம்சன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ரியான் பராக் 43 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஹெட்மையர் 5 ரன்னில் வெளியேற, துருவ் ஜுரெல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். சஞ்சு சாம்சன் 82 ரன்களும் ஜுரெல் 20 ரன்களும் எடுத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 193 ரன்கள் எடுத்தது.
194 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி லக்னோ அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் குவின்டன் டி காக் – கேப்டன் கேஎல் ராகுல் ஆகியோர் களத்தில் இறங்கினர்.
குயின்டன் டி காக் வெறும் 4 ரன்களை எடுத்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் ஓட்டம் ஏதும் எடுக்காமலும், அவரைத் தொடர்ந்து வந்த ஆயுஷ் பதோனி ஒரு ரன்னிலும் வெளியேறினர். இதனால் 3.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 11 ரன்கள் மட்டுமே லக்னோ அணி எடுத்திருந்தது. இதையடுத்து தீபக் ஹூடாவுடன் இணைந்து கேஎல் ராகுல் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
தீபக் ஹூடா 26 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்துவந்த நிக்கோலஸ் பூரன் – கேஎல் ராகுல் உடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் லக்னோ அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.
ராஜஸ்தான் அணியின் பவுலர்கள் சந்தீப் ஷர்மா, ஆவேஷ் கான் ஆகியோர் கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி லக்னோ அணியின் ரன் குறிப்பு வேகத்தை கட்டுப்படுத்தினர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 173 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 58 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 64 ரன்களும் எடுத்தனர்.