• சிறந்த எதிர்காலத்திற்கான வழி எதுவென இளைஞர் சமூகம் தான் தெரிவு செய்ய வேண்டும்.
• சில அரசியல்வாதிகள் தமது அரசியல் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் போது நான் நாட்டை பற்றியே சிந்தித்தேன் – “யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம்” உடனான சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு.
புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றும், கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் போல எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
ஏனைய அரசியல்வாதிகள் பொறுப்பேற்கத் தயங்கிய நாட்டையே தான் பொறுப்பேற்றதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சிலர் தமது அரசியல் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்தித்த போதும், தான் நாட்டின் எதிர்காலத்தை பற்றியே சிந்தித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
பொலன்னறுவையில் நேற்று (23) நடைபெற்ற “யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம்” உடனான சிநேகபூர்வ கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
“ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்” என்ற இச்சந்திப்பில் நாட்டின் எதிர்காலம் மற்றும் தூரநோக்குக் குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, இளையோரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கம் மேற்கொண்டு வரும் புதிய பொருளாதார சீர்திருத்தங்களின் பிரதிபலன்கள் இன்னும் சில வருடங்களில் மக்களுக்கு கிடைக்கும் என்றும் எனவே, தங்களினதும் நாட்டினதும் எதிர்காலத்திற்கான சிறந்த வழி எதுவென்பதை நாட்டின் இளைஞர்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“சரிவடைந்திருந்த நாட்டையே நான் பொறுப்பேற்றேன். அவ்வாறான நிலையில் அரசியல்வாதிகள் நாட்டைப் பொறுப்பேற்கத் தயங்கினர். நான் பொறுப்பேற்காவிட்டால் நாட்டின் நிலைமை என்னவாகும் என்பதை சிந்தித்தேன். அந்த நேரத்தில் நாட்டை பொறுப்பேற்றால் அரசியல் நலன்களை இழக்க நேரிடுமென பலரும் நினைத்தனர். அவர்கள் தங்களைப் பற்றி மட்டும் சிந்தித்தனர். நான் நாட்டை பொறுப்பேற்காவிடின் எமக்கான நாடொன்று எஞ்சியிருக்குமா என்பதையே நான் சிந்தித்தேன்.
பாராளுமன்றத்தில் தனியொரு ஆசனம் மட்டுமே இருந்தது. எனக்கு இருந்த ஒரே பிரச்சினை அதுவாகவே இருந்தது. அதற்கு முன்னதாக நான் டிசம்பர் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் கலந்துரையாடியிருந்தேன். உலக வங்கியுடனும் கலந்தாலோசித்தேன்.
அதுபற்றி முன்னாள் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப் படுத்துமாறு கூறினேன். அத்துடன் கடந்த தேர்தல் சமயத்தில் நாட்டில் பணமில்லை என்பதை ஐ.தே.க அறவித்தது. குறைந்தபட்சம் 3000 மில்லியன் டொலர்களையாவது கையிருப்பில் வைத்திருக்க வேண்டியது அவசியமென கூறியது. அப்போது மக்கள் எமக்கு வாக்களிக்க வில்லை. ஆனால் 2021 ஆம் ஆண்டில் நாம் கூறியவை உண்மையாக நிகழ்ந்தன.
அத்தகைய நிலையில் நான் நாட்டைக் பொறுப்பேற்றேன். நான் நாட்டைக் பொறுப் பேற்றுக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? நாட்டின் பொருளாதாரம் முழுமையாக முடங்கிப் போயிருக்கும். சரிவடைந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை நாடினோம். தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ள நிலையில், எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம்.
இந்தக் கலந்துரையாடல்களின் பின்னர் எமது நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு அந்த நாடுகளின் உதவிகள் கிட்டும். அதனால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடாது. நாம் இன்னும் இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தையே கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு வருடத்திலும் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக காணப்படுகிறது. அந்த இடைவௌியை சரிசெய்ய மீண்டும் கடன்களைப் பெறுகிறோம். இந்நிலை தொடர்ந்தால் இன்னும் 10 வருடங்களில் மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிவிடுவோம்.
நீங்கள் 27 வயது இளைஞராக இருந்தால் உங்களுக்கு 37 வயதாகும் போது மீண்டும் இதே போன்ற பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நீங்கள் தயாரா என்று கேட்க விரும்புகிறேன். எரிபொருள் கொள்வனவு செய்ய பணம் இல்லாத, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நாட்டை ஏற்க அன்று யாராவது இருந்தார்களா? இந்த பொருளாதார நெருக்கடியை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுச் செல்லாமல் இருப்பது அனைவரினதும் பொறுப்பாகும். அதற்காக அர்பணிக்க வேண்டும். விரைவில் நாம் பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தில் இருந்து ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு நாம் செல்ல வேண்டும்.
அதற்கு நகரங்களில் மாத்திரமின்றி கிராமங்களினதும் பொருளாதாரத்தைப் பலப்படுத்த வேண்டும். வரவு செலவு திட்டத்தை சரியாக வரையறுக்க வேண்டும். அரசாங்கத்தின் திட்டங்கள் சரியாக செயற்படுத்தப்பட்டால் 2035 ஆம் ஆண்டுக்குள் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கி நகர முடியும். அதன் பின்னர் துரித பொருளாதார அபிவிருத்தியை எட்ட முடியும்.
அத்துடன் வருடாந்தம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 25 – 50 இலட்சம் வரையில் அதிகரிக்க வேண்டும். மேலும், அதிக பணம் செலவிடும் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர வேண்டும்.
மேலும், விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் கிராமங்களைப் பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனூடாக விவசாய ஏற்றுமதி இலக்குகளை விரைவில் அடையலாம். இதன் போது புதிய பயிர்களை விளைவிப்பது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியிருப்பதோடு, தூரியன் உற்பத்தி குறித்து தாய்லாந்து அரசாங்கத்துடன் கலந்துரையாடிள்ளோம். மேலும், இந்நாட்டில் பயிர் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலம் கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியும்.
சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்திற்கான சாத்தியக்கூறுகள் நாட்டில் அதிகமாக உள்ளன. அதனால் காற்றாலை மற்றும் அனல் மின்சாரத்திற்கான வலுசக்தி உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்தி, தேவைக்கு அதிகமான மின்சாரத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முடியும். அத்துடன் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் முதலீட்டு வலயத்தை உருவாக்க ஆயிரம் ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மகாவலி ஏ – பீ வலயங்களை அபிவிருத்தி செய்து நவீன விவசாயத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
பிங்கிரிய மற்றும் வடக்கில் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அதற்குத் தேவையான காணிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டங்கள் அடுத்த 05 வருடங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
உங்கள் எதிர்காலத்திற்காகவே இதையெல்லாம் செய்கிறேன். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக என்றுதான் சொல்ல வேண்டும்.
மேலும், ஹிங்குரக்கொட பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதோடு இந்த வருடம் ஹிங்குரக்கொட விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதன் மூலம் இந்தப் பிரதேசத்திற்கு உள்ளக விமான சேவைகள் கிடைக்கும்.
மேலும், பொலன்னறுவை வரலாற்று முக்கியமான நகரத்தை சுற்றுலாப் பயணிகளுக்காக இரவும் பகலும் திறந்துவிடலாம். நமது கலாச்சார அழகுகளையும் நவீன நடனங்கள் மற்றும் உள்ளூர் உணவு மற்றும் பானங்களுடன் இணைத்து சுற்றுலாத் திட்டங்களைத் தயாரிக்க முடியும். இந்தச் செயற்பாடுகள் அனைத்தையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
எனவே, நாடு எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை இளைஞர்கள் தீர்மானிக்க வேண்டும். உங்கள் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். உங்கள் எதிர்காலம் தொடர்பில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
இளைஞர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்த பதில்களும் பின்வருமாறு:
கேள்வி:
லங்காபுர கிராமசேவகர் பிரிவில் பெருமளவு வயல் நிலங்கள் உள்ளன. சில வயல்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமானவை. அந்த வயல்களை மீண்டும் எமக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பதில்:
1985 வரைபடத்தின் பிரகாரம் வனவள திணைக்களத்திற்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன. மேலும், அந்த வரைபடத்தின்படி, கிராமங்களுக்கு சொந்தமான நிலங்களும் உள்ளன. எனவே, இதுபற்றி ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கிறோம்.
கேள்வி:
இளைஞர்களாகிய நாங்கள் உங்கள் மீது அபிமானம் உள்ளது. இந்தப் பிரதேசம் டொலர்களை சம்பாதிக்கக்கூடிய பகுதி. நம் கிராமங்களுக்கு வரும் காட்டு யானைகளை காண்பித்து வெளிநாட்டவர்களிடம் டொலர்களை சம்பாதிக்கும் திறமை நம்மிடம் உள்ளது. அதற்காக எமக்கு பயிற்சிகளை வழங்கி நாட்டிற்கு டொலர்களை சம்பாதிப்பதோடு எமது வருமானம் ஈட்டும் திறன் குறித்தும் உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
பதில்:
நமது நாட்டில் சுற்றுலாத்துறை இன்று பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது. மேலும், சுற்றுலாத்துறையை மேம்படுத்த குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்காலத்தில் இந்தக் கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி:
நாங்கள் வெலிகந்த பிரதேசத்தில் உள்ள தொலைதூர கிராமத்தில் வசிக்கிறோம். அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு காணிகளை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
பதில்:
1977 களில் வெலிகந்த பிரதேசம் பெரும் காடாக இருந்தது. வெலிகந்த மற்றும் மாதுரு ஓயா இன்று விவசாயத்திற்கு சிறந்த பிரதேசங்களாக மாறியுள்ளன.விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நவீன விவசாயத்தை கிராமத்திற்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். அத்துடன் நாம் ஆரம்பித்துள்ள ‘உறுமய’ திட்டத்தின் கீழ் மக்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். 20 இலட்சம் பேருக்கு சட்டப்பூர்வ காணி உரிமை கிடைக்கும் திட்டத்தை இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கிறோம். மேலும், இந்த பகுதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் பயிற்செய்கை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும் எதிர்பார்க்கிறோம்.
கேள்வி:
சுற்றுலாத்துறைக்கு திம்புலாகலை தனித்துவமான பிரதேசமாகும். இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு பரிந்துரைக்கிறேன்.
பதில்:
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் மூலம் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது. இதன்படி, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், இந்த நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மேலும், சுற்றுலாத்துறையின் வருமானம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துப் பிரசேதங்களையும் சுற்றுலாத்துறையைக் கவரக்கூடிய பகுதிகளாக அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது .
கேள்வி:
ஜனாதிபதி அவர்களே! நான் ஒரு சட்டக்கல்லூரி மாணவன். 1989 ஆம் ஆண்டு ஒரே நாளில் எனது குடும்பத்தைச் சேர்ந்த 06 பேரை ஜே.வி.பி கொன்று 08 மில்லியன் பெறுமதியான சொத்துக்களை சூறையாடியது. குடும்பத்தவர்களின் சடலங்களை கூட மயானத்திற்குக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஜே.வி.பி ஆவி இன்னும் இருப்பதாக நாங்கள் அச்சத்தில் இருக்கிறோம்.
கொல்லப்பட்ட குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவரான நான் அரசியல் பழிவாங்கல் காரணமாக ஹிங்குரங்கொடை உள்ளூராட்சி சபைக்கு சொந்தமான பிரதான வீதியில் உள்ள எனது கடையை கூட அரசியல் பலிவாங்கல் காரணமாக இழந்துள்ளேன். மூன்று தசாப்தங்களாக என்னைப் போன்ற பல இளைஞர்கள் இந்த அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியிருப்பதோடு அதன் காரணமாக எங்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக உங்களிடம் ஏதேனும் திட்டங்கள் உள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன்.
பதில்:
அது தொடர்பில் கவனம் செலுத்த தயாராக உள்ளோம். உங்கள் கல்விச் செயற்பாடுகள் வெற்றியளிக்க வாழ்த்துகிறேன்” என்று ஜனாதிபதி பதிலளித்தார்.
ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் பிரதி அமைச்சர் சந்திரசிறி சூரியராச்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மின்னேரியா தொகுதி அமைப்பாளர் ஜகத் சமரவிக்ரம, யுனைடட் யூத் ஆலோசனை சபையின் தலைவர் சுதத் சந்திரசேகர, அதன் பணிப்பாளர் நாயகம் பிரசாத் அசங்க ரத்நாயக்க, தேசிய அமைப்பாளர் விஜித் அநுராத மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான இளைஞர் யுவதிகள் இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.