நீண்ட நாள்களாகவே அவருக்கு ஒற்றைத் தலைவலி இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 14ம் தேதி அவருக்குக் கடுமையான தலைவலி, வாந்தி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மூளையின் ஒருபகுதியில் ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டது.
அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவர் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா, “சத்குரு ஜி, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் மரணம் என்ற இயற்கையான விஷயம் அவருக்கும் உண்டு என்பது என் மனதைக் கலங்கச் செய்தது. இதற்குமுன், நான் அவரை எலும்பும், சதையும் கொண்ட சாதாரண மனிதனாகப் பார்க்கவில்லை.
ஒரு கடவுள் இடிந்துபோயிருப்பதைப் போல உணர்ந்தேன். பூமி மொத்தமாக மாறிவிட்டதாகவும், இந்த வானம் என்னைக் கைவிட்டதைப்போலவும் நினைத்து என் தலை சுற்றிப்போனது. இந்த எதார்த்தமான உண்மையை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. உடைந்துபோயிருக்கிறேன். அவரின் பக்தர்கள் அனைவரும் உடைந்து போயிருக்கிறார்கள். அவர் குணமாகவில்லையென்றால் சூரியன் உதிக்காது, இந்த பூமி நகராது. இந்தத் தருணம் இப்போது உயிரற்றிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.