இளம் முற்சக்கரவண்டி சாரதிகளின் தொழில் அறிவு மற்றும் திறமைகளை முன்னேற்றும் நோக்கில் பெயின்டிங், இலக்ரீசியன், நீர்க்குழாய் பொருத்துனர், சிகை அலங்காரம் மற்றும் தச்சு போன்ற துறைகளைக் கருத்திற்கொண்டு தொழிற்பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டமொன்றை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை எதிர்பார்க்கின்றது.
அதற்கிணங்க, இதன் முதற்கட்டமாக கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் வேலைத்திட்டங்களை நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதுடன், முதற் குழுவின் நிகழ்வை 31.03.2024 இற்கு முன்னர் கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபை மற்றும் தொழில் அமைச்சின் விதாதா பிரிவிற்கும் இடையே (19) கைச்சாத்திடப்பட்டது.
இதன்போது தொழில் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் ஜயசமரா குணரத்ன, மேலதிக செயலாளர் பி. எம். பீ. கே. கருணாரத்ன, இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையின் தலைவரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான ஓய்வுபெற்ற எயார் வயிஸ் மார்ஷல் பிரசன்ன ரணசிங்க, உப தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் பிரியந்த வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.