இந்திய உயர்ஸ்தானிகர் அமைச்சர் நிமலிடம் உறுதி
இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காங்கேசந்துறைத் துறைமுகத்தின் பூரண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 61.5மில்லியன் ரூபாய் நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கையின் இந்தியாவிற்கான உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
உயர் ஸ்தானிகருக்கும் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விற்கும் இடையே அண்மையில் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் துறைமுகத்தின் உட்பகுதியில் பாரிய கப்பல்கள் மற்றும் நங்கூரமிடுவதற்கு 30 மீற்றர் வரை துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கும் புதிய நீர்த்தடையொன்றை நிருமாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்போது இந்தியா மற்றும் இலங்கையிடையே பிராந்திய ஒத்துழைப்பை பரவலாக்குவதனால் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையை இலங்கையில் அதிகரிப்பதற்காக இந்தியாவின் பூரண ஆதரவை வழங்குவதாக உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.
அவ்வாறே இந்திய சுற்றுலாப் பயணிகளுக்குப் பொருத்தமான பயணத்தளமாக இலங்கை காணப்படுவதாக இந்திய அரசாங்கத்தினால் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விமான சேவைகள் மற்றும் கப்பற் துறையில் இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஆதரவு தொடர்பாக இலங்கை அரசாங்கமும், தனது அமைச்சும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும், விசேடமாக சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையேயான விமானப் பயணத்தை ஆரம்பித்தல் என்பது மிகவும் சிறந்த கருத்து என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்திய சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 600 மில்லியன் டொலர் செலவில் நவீன துறையொன்றை காங்கேசந்துறைத் துறைமுக வளாகத்தில் அமைத்ததாகத் தெரிவித்த அமைச்சர் கடந்த ஒன்பது மாத காலத்திற்குள் இந்திய சுற்றுலாப் பயணிகள் பாரியளவில் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் இந்த அமெரிக்க டொலர் 61.5 மில்லியன் ரூபா உதவியைப் பயன்படுத்தி விரைவாக காங்கேசந்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் மேலும் வலியுறுத்தினார்.