முல்லைத்தீவு மாவட்டத்தின் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுவின் தலைவருமான திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நேற்றைய தினம்(21) பி.ப 2.00 மணிக்கு இடம்பெற்றது.
மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பிரதேச மட்ட காணி பயன்பாட்டு குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட சிபாரிசுகளின் அடிப்படையில் மாவட்ட பயன்பாட்டு குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு சிபாரிசு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது இற்றைப்படுத்தப்பட்ட பிரதேச காணிபயன்பாட்டுத் திட்டங்களை உள்ளடக்கிய புத்தகங்களை பிரதேச செயலாளர்களுக்கு கையளித்ததுடன் இலங்கை காணி பயன்பாட்டுத் திட்டமிடல் கைநூல் – 2023 மற்றும் பங்கேற்பு காணிபயன்பாட்டுத் திட்டமிடல் வழிகாட்டுதல்கள் – 2021 முதலானவற்றை பிரதேச மட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
மேலும் இதன்போது நீண்ட கால குத்தகையில் வர்த்தக நிலையங்கள் அமைந்த காணித்துண்டுகள், புதிய அரச வன பகுதியில் அமைந்த காணி துண்டுகளை நீண்ட கால குத்தகையில் வழங்குதல், திணைக்களங்களுக்கு காணி கையளித்தல், பொதுத் தேவைக்கு பயன்படுத்தப்படும் காணிகளை கையளித்தல், நீண்டகால குத்தகையில் காணி வழங்குதல் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் (நிர்வாகம்), மேலதிக அரசாங்க அதிபர்(காணி) சி.ஜெயகாந், மாவட்ட செயலக காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர் கு.முரளிதரன், சிரேஸ்ட நில அளவையாளர், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.