கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்திர பொங்கல் உற்சவம் கடந்த 17ம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 24 ம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்களின் போக்குவரத்துக்கள் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(19) பதில் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகளை ஒன்றிணைந்த போக்குவரத்து சேவையாக இடையூறின்றி நடாத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, கிளிநொச்சி மாவட்ட பேரூந்து நிலையத்திலிருந்து இரண்டு தனியார் பேரூந்துகளுக்கு ஒரு அரச பேரூந்து சேவையில் ஈடுபடும். அதேவேளை வெளி மாவட்டங்களில் இருந்து தலா ஒவ்வொரு பேருந்துகள் சேவையில் ஈடுபடும்.
மேலும் பொங்கல் தினத்திற்கு முதல் நாள் தலா ஒவ்வொரு பேருந்துகள் சேவையில் ஈடுபடும். சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு மட்டுமே மீண்டும் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபட(TURN) அனுமதி அளிக்கப்படும்.
போக்குவரத்து ஒழுங்குகளை வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, பொலீஸ் உத்தியோகத்தர்கள், ஆலய நிர்வாக சபையினர், கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையினர் இணைந்து செயற்படுவார்கள் என்கின்ற தீர்மானங்கள் எட்டப்பட்டன.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா, கண்டவளை பிரதேச செயலாளர் ரி. பிருந்தாகரன், கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய நிர்வாகத்தினர், பொலிஸார், வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையினர், மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.