இங்கிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் 26 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது டெஸ்ட் பேட்டி ராஜ்கோட்டில் நடைபெற்ற போது டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய சாதனையை படைத்தார். 500 விக்கெட்டுகளை டெஸ்டில் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் கும்ப்ளேவுக்கு அடுத்த இடத்தில் உள்ளார் அஷ்வின்.
தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் 36 ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கும்ப்ளேவின் சாதனையையும் முறியடித்தார். தொடர்ச்சியான சிறப்பான ஆட்டம் காரணமாக அஷ்வின் தற்போது ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார். இந்நிலையில் டெஸ்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றியதற்காக அஷ்வினுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அப்போது அஷ்வினுக்கு ரூ. 1 கோடிக்கான காசோலையுடன் 500 தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.