இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கிரிக்கெட்டை கொண்டாடும் இந்த தேசத்தில் கோடிகளில் பணம் புரளும் முக்கிய நிகழ்வாக ஐபிஎல் பார்க்கப்படுகிறது. ஆண்களின் ஆதிக்கமே அதிகம் இருந்த நிலையில் கடந்தாண்டு மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி பட்டம் வென்று அசத்தியிருந்தது. இந்நிலையில் மும்பை, பெங்களூரு, டெல்லி,உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட 5 அணிகள் மோதிய இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது. இந்நிலையில் முறையே 2 மற்றும் 3 ஆம் இடங்களில் இருந்த மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியில் எலிசி பெர்ரி அதிகபட்சமாக 66 ரன்கள் சேர்த்தார்.
136 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணியில், கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் மட்டுமே அதிகபட்சமாக 33 ரன்கள் சேர்த்தார்.
20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 130 ரன்கள் மட்டும் சேர்த்து தோல்வியை தழுவியது. 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நாளை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை பெங்களூரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
இத்தனை ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலியால் ஒரு கோப்பை கூட வாங்கித் தர இயலாமல் தடுமாறும் நிலையில், பெங்களூரு அணியின் வீராங்கனைகள் தங்கள் அணிக்கு கோப்பையை பெற்றுத் தர முனைப்புடன் இருக்கின்றனர்.
” ஈ சாலா கப் நம்தே” என்று பெங்களூரு ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர். கனவை நிஜமாக்குவார்களா பெங்களூரு வீராங்கனைகள் இல்லை வழக்கம் போல சொதப்புவார்களா என்பது நாளை மாலை தெரிந்துவிடும். சம பலம் வாய்ந்த டெல்லி அணியும் முதல் முறையாக கோப்பையை கையில் ஏந்த தீவர பயிற்சிகளை செய்து வருகிறது.
பெங்களூரு -டெல்லி அணிகள் மோதும் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.