7 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய சிராஜ் 2015-16 ரஞ்சி டிராபியில் ஹைதராபாத் அணிக்காக சிராஜ் தனது முதல் தரப் போட்டியில் அறிமுகமானார். தற்போது இந்திய அணியின் முதன்மை பௌலர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள சிராஜ், ஐபிஎல்-லில் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அவர் தனது கடந்தகால அனுபவங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார்.
“2019 – 2020 காலங்களில் மிகக் கடினமான சூழ்நிலைகளைச் சந்தித்ததால் கிரிக்கெட்டை விட்டு விடலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆரம்பக் கட்டத்தில் நான் கேட்டரிங் வேலைக்குச் சென்றேன். என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் என்னைப் படிக்கச் சொன்னார்கள். நாங்கள் வாடகை வீட்டில் இருந்தாலும் கிரிக்கெட் விளையாட எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.
எங்கள் வீட்டில் அப்பா மட்டுமே வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பவராக இருந்தார். அப்போது எனக்கு 100 – 200 ரூபாய் கிடைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கும். அதில் 100 – 150 ரூபாயை வீட்டில் கொடுத்து விட்டு 50 ரூபாயை நானே வைத்துக்கொள்வேன்.
இதுபோன்ற சில போராட்டங்களுக்குப் பிறகே நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். நீங்கள் கடினமாக உழைக்கும் போது அது கண்டிப்பாக வீண் போகாது. இன்று அல்லது நாளை அல்லது சில வருடங்கள் கடந்தாலும் உங்களுடைய கடினமான உழைப்புக்குக் கண்டிப்பாக ஒரு நாள் நல்ல பலன் கிடைக்கும்” என்று கூறியிருக்கிறார்.