ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே காயம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் பங்கேற்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22 ஆம் தேதி வெள்ளியன்று தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி வந்த கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஃபீல்டிங் செய்வதை தவிர்த்தார். இந்த போட்டியில் அவரது மும்பை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது தனது காயத்திற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின்போது காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டிருப்பது கொல்கத்தா அணி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வரும் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பது சந்தேகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.