விவசாய சம்மேளனத்தினால் யானை வேலி அங்குரார்ப்பண நிகழ்வு..!!
மேலும் மின்சார வேலி அமைப்பதற்கான 10 இலட்சம் நிதியும் கௌரவ பைசால் காசிம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் ஒதுக்கீடு.
செங்கப்படை ஆற்று பிரிவின் விவசாய அமைப்புகளின் சம்மேளத்தின் தலைவர் சட்டத்தரணி AM நசீல் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட யானைகளின் வருகையை கட்டுப்படுத்தும் 4KM வரையிலான மின்சார வேலி அங்குரார்ப்பண நிகழ்வு 2024.03.10 ம் திகதி நடைபெற்றது.
விவசாயத்தினை ஜீவனோபாய தொழிலாக கொண்டுவாழும் நிந்தவூர் பிரதேச மக்கள் பல தசாப்தங்களாக காட்டு யானைகளின் பிரவேசம் காரணமாக உயிர் அச்சுறுத்தல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கும் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வந்த நிலையில், விவசாய அமைப்புகளினதும் தனவந்தர்களினதும் முழுமையான அனுசரணையில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியினையும் ஆதரவினையும் பெற்று செங்கப்படை ஆற்றுப் பிரிவின் விவசாய அமைப்புகளின் சம்மேளத்தின் ஏற்பாட்டில் 06 மில்லியன் ரூபாய் பெறுமதியான மின் வேலி இடப்பட்டது , இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வருகை தந்த திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் அங்குரார்பணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் “எமது பிரதேச மக்கள் பொது தேவைகளுக்காக நிதி சேகரித்து அவற்றுக்கு உதவி புரிவதை பல சந்தர்ப்பங்களில் அவதானித்துள்ளதோடு, குறித்த பண்பு மகிழ்ச்சியளிக்கின்றது. யானை மனித மோதலில் இருந்து மீழுவதற்கு சம்மேளனம் எடுத்துள்ள முயற்சிக்கு நன்றி கூறுகின்றோம். அந்த வகையில் விரிவாக்கல் பணிக்காக 10 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். மேலும் அரசாங்க அதிபரோடு பேசியபோது, அமைச்சுடன் கலந்துரையாடி உதவிகளை பெற்றுக்கொள்ளும் ஆலோசனையையும் முன்வைத்துள்ளேன். யானைகளை குறித்த பிரதேசங்களிலிருந்து ஊருக்குள் வருவதை தடுப்பதற்கான மாற்று நடவடிக்கைகள் தொடர்பாகவும் உயர் சபைகளில் பேசிவருகின்றோம் ” எனவும் குறிப்பிட்டிருந்ததோடு எதிர்கால விவசாய துறை விரிவாக்கல்கள் தொடர்பான விடயங்களையும் விவசாயிகளுடன் கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கு கலந்துகொண்ட பலரும் தாங்கள் உரை நிகழ்த்தும் போது இவ்விடயம் தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்கள் மேற்கொண்ட முன்னெடுப்புகள் பலவற்றையும் சுட்டிக்காட்டியதோடு, தங்களது நன்றியினையும் தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக மாவட்ட அரசாங்க அதிபர் சித்திக அபயேவிக்கிரம , நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லத்திப் , கல்முனை பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் அஸ்கி , நிந்தவூர் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி நஜீம் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , விவசாய கண்ட தலைவர்கள் , பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.