இரு பிள்ளைகளை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு தந்தை தனது உயிரை மாய்க்க முயற்சி –
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தனது உயிரை மாய்த்துக் கொள்ள தந்தையொருவர் முயற்சி செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினமான இன்று வியாழக்கிழமை (14) காலை பெரிய நீலாவணை முஸ்லிம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலங்களும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளது.
அத்துடன் தனது மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளை கொன்று உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த தந்தையும் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரணமடைந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.