புரிதலின்றி அள்ளி வீசிய அரசியல் வாக்குறுதிகளால் மக்கள் பாதிப்பு..!!

நாட்டின் பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லாமல் அள்ளிவீசிய அரசியல் வாக்குறுதிகளால் மக்கள் பாதிக்கப்பட்டனர்

  • அந்தத் தவறைச் செய்ய நான் தயாராக இல்லை.
  • நாம் மிக விரைவில் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு திரும்ப வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நாட்டின் பொருளாதாரம் பற்றிய உண்மையைப் புரிந்து கொள்ளாமல், அதிகாரத்தைப் பெறுவதற்காக வழங்கிய அரசியல் வாக்குறுதிகளினால் நாட்டு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அந்தத் தவறை செய்ய தாம் தயாரில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, உண்மைக்கு முகம் கொடுத்து நாட்டுக்கு சாதகமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த “இளைஞர் எமது எதிர்காலம்” என்ற சிநேகபூர்வ சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பு நேற்று (12) தப்ரபேன் எண்டர்டைன்மண்டில் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக நாம் விரைவாக ஏற்றுமதி பொருளாதாரத்திற்குத் திரும்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான இளைஞர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டதுடன், ஜனாதிபதியிடம் நேரடியாக கேள்விகளைத் தொடுத்தனர்.

முன்வைக்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சாதகமான பதில்களை வழங்கிய ஜனாதிபதி, இளைஞர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையைக் குறிக்கும் வகையில், “யுனைடட் யூத் அமைப்பின் ஆலோசகர் நியோமல் பெரேரா ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி வழங்கிய பதில்களும் பின்வருமாறு.

கேள்வி:

தற்போது கைபேசிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. மேலும், இணையதளச் சேவைக் கட்டணத்திலும் சிக்கல் உள்ளது. ஆனால் நீங்கள் ஒன்லைன் கல்வி முறையை அறிமுகப்படுத்தியதால், கடந்த கொரோனா காலத்தில் வசதியாக அமைந்தது. எனவே இளைஞர்களின் தகவல் தொடர்பு அறிவை மேம்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள்?

பதில்:

அனைத்தையும் இலவசமாகக் கொடுப்பதுதான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய முக்கிய காரணமாக இருக்கிறது. இலவசமாக கொடுப்பதற்காக வேறொருவரிடமிருந்து அறிவிடவேண்டியுள்ளது. நம் நாட்டில் எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்தோம். வருமானம் இல்லாத போது மக்களுக்கு இலவச நிவாரணம் வழங்க பணம் அச்சிடப்பட்டது. இதனால், நாம் பெற்ற வெளிநாட்டுக் கடனைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இறுதியாக, கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தோம்

அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, ​​மக்களிடம் பணம் செலுத்தும் திறன் ஏற்படும். பணம் செலுத்தும் திறன் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க புதிய திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். தற்போது இலங்கையில் ஒரு டொலருக்காக சுமார் 310 ரூபா செலவிடப்படுகிறது. நாங்கள் பெரும் நெருக்கடிக்கு மத்தியில் இருக்கிறோம். அந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக தற்போது நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

எனவே, நான் இலவச டேட்டா வழங்குவதாக இங்கு உறுதியளித்தால், அது அனைவரையும் தவறாக வழிநடத்துவதாகவே அமையும். எனவே, வலுவான பொருளாதாரத்தை உருவாக்கி, மக்களின் பணம் செலுத்தும் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை செயல்படுத்துவோம் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். சிலவற்றை இலவசமாகக் கொடுத்தால், எதிர்காலத்தில் மீண்டும் மின்வெட்டு, எரிபொருள் வரிசைகள் உருவாகும். நாடு மீண்டும் கடந்த காலத்தின் இருண்ட யுகத்திற்குள் சென்று விடாமல் அவதானமாக இருக்க வேண்டும்.

கேள்வி:

அரசுக்குச் சுமையாக இல்லாமல், தங்கள் திறமையைக் கொண்டு வியாபாரம் செய்ய விரும்புவோர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் எவ்வாறு பங்களிக்க முடியும்? சப்ரகமுவ மாகாணத்தில் இன்னும் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் உங்கள் நகர்வு என்ன?

பதில்:

ஆசிரியர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக ஒரு குழு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. அந்தப் பிரச்சினை காரணமாக ஆசிரியர் நியமனத்திற்கான ஆட்சேர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறோம்.

மேலும், சுயதொழில் செய்யும் தொழில்முனைவோருக்கு உதவிகளை வழங்க எதிர்பார்க்கிறோம். கடந்த பொருளாதார நெருக்கடியின் போது, ​​சுயதொழில் செய்தவர்கள் சரிவைச் சந்தித்தனர். ஒரே நேரத்தில் பெருமளவானவர்களுக்கு வங்கிக் கடன்கள் வழங்கினால் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். எனவே, சுயதொழில் செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வங்கிக் கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்பு சுயதொழில் செய்பவர்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடனை வசூலிப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. சுற்றுலா தொடர்பான சுயதொழில்கள் அதிக நாட்டம் கொள்ள வேண்டும். இந்த நாட்டில் சுற்றுலா வணிகம் தற்போது பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

​கேள்வி:

விளையாட்டுத் துறையினரின் போஷாக்கு குறித்த பல பிரச்சினைகள் உள்ளன. அதற்காக அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.?

பதில்:

அதற்கான நிவாரணத்தை விளையாட்டுத்துறை அமைச்சு வழங்கியுள்ளது. அதனை விடவும் விளையாட்டு வீரர்களின் போஷாக்கை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளை முன்னெடுப்போம். பயிற்சி மையங்களை அதிகரிப்போம். 8 வயதிலிருந்து விளையாட்டு வீரர்களுக்கு அவசியமான போஷாக்கு வழங்கப்பட வேண்டும். 8 வயது முதல் போஷாக்கை மேம்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும். அதன்படி பாடசாலை விளையாட்டு வீரர்களின் போஷாக்கை மேம்படுத்த தனியார் துறையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளவுள்ளோம். விளையாட்டு வீரர்களுக்கு அவசியமான வைத்திய ஆலோசனைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விளையாட்டுக்குத் தேவையான உடைகளும் வழங்கப்படும். மற்றைய நாடுகள் வணிக ரீதியிலான விளையாட்டுகளில் ஈடுபடுவதால் அவர்களுக்கு தனியார் துறையின் பங்களிப்பும் கிடைக்கிறது. இலங்கையின் விளையாட்டுக்கள் வணிக அளவில் வளர்ச்சி காணவில்லை. அடுத்த தசாப்தத்தில் இலங்கையின் விளையாட்டுக்களை வணிக ரீதியில் மேம்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்கும்.

கேள்வி:

மக்களுக்கு அஸ்வெசுமவின் ஊடாக வழங்கப்படும் 5000 ரூபாவிற்குள் மட்டுப்பட்டிருப்பதோடு, மக்களின் இயலுமைகளை அறிந்துகொண்டு பயிற்சி அளிப்பதன் மூலம் பொருளாதாரத்திற்கான மூலதனத்தை வழங்கும் வலுவான வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தலாம் அல்லவா?

பதில் :

நாம் மிகக் கடினமான காலத்தைக் கடந்துள்ளோம். அதன்போது மக்களை வாழ வைப்பதையே முதற் கடமையாக கருதினோம். வியாபாரங்களுக்கு முன்னதாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்கான போராட்டம் காணப்பட்டது. அதேபோல் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியுடனான பேச்சுவார்த்தைகளின் போதும் மக்கள் தொடர்பில் கலந்துரையாடினோம். மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டிய தேவை இருந்தது அதற்கு அவசியமான நிதியை எவ்வாறு தேடுவது என்ற கேள்வியும் எம்முன்னே இருந்தது. பின்னர் அஸ்வெசும வேலைத் திட்டத்திற்காக உலக வங்கி 100 மில்லியன் டொலர்களை வழங்கியது. சமூர்த்தி தொகை மக்களுக்கு போதுமானதாக இருக்கவில்லை.அதனால் அதுபோன்ற மூன்று மடங்கு தொகையை மக்களுக்கு வழங்கினோம். தகுதியானவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கினோம். இந்த ஒத்துழைப்பு இல்லாமல் மக்கள் முன்னோக்கிச் செல்வது கடினமானது.

குறைந்த வருமானம் ஈட்டும் மக்கள் இந்தப் பணத்தை அத்தியாவசிய பொருள் கொள்வனவிற்காக பயன்படுத்துகின்றனர். அதனால் சந்தை வலுவடையும். அதனால் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். அதேபோல் வரவு செலவு திட்டத்தில் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மற்றும் மலைநாட்டு தசாப்தம் வேலைத்திட்டத்தின் நிதியை செலவிடும் போதும் அவை மீண்டும் அரசாங்கத்திடம் வந்தடையும். கடந்த காலங்களில் சிறிய கிராம மட்டத்திலான தொழில்துறை சரிவடைந்திருந்தது. அவற்றை மீளக் கட்டியெழுப்புவதால் அவை மீண்டும் நாட்டின் பொருளாதாரத்தில் இணைக்கப்படும்.

தற்போதும் சுற்றுலாத் துறையில் கிடைக்கும் பணத்தைக் கொண்டே பொருளாதாரம் நகர்த்திச் செல்லப்படுகிறது. அதேபோல் 2023 ஆம் ஆண்டில் நல்ல விளைச்சலைப் பெற்றுக்கொள்ள அர்பணிப்புடன் செயற்பட்டடோம். அதனால் எமது பொருளாதாரத்திற்குள் பணப் புழக்கம் அதிகரித்தது. அதேபோல் மக்களுக்கு காணி உரிமைகளை வழங்கவுள்ளோம். மேல் மாகாணத்தின் மாடிக் குடியிருப்புகளில் இருப்போருக்கும் வீட்டு உரிமைகளை வழங்கும் வேலைத் திட்டத்தை செயற்படுத்தியுள்ளோம்.

கேள்வி:

தூரப் பிரதேச மாணவர்களுக்கு அவர்களின் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தொலைத் தொடர்பு வசதிகளை பெற்றுகொடுப்பது சிறந்தல்லவா?

பதில் :

சில பகுதிகளில் இந்தப் பிரச்சினை உள்ளது. டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். கிராமத்திற்குள் காணப்படும் வசதிகளை மையப்படுத்தி, அங்கு மேம்பாடுகள் ஏற்படும். அதற்குரிய வசதிகளை நாம் படிப்படியாக மேம்படுத்துவோம். SLT நிறுவனம் தனியார் மயப்படுத்தப்பட்ட பின்னர் மேற்படி உட்கட்டமைப்பு வசதிகளைப் பலப்படுத்துமாறு அறிவிப்போம். புதிய தொழில்நுட்பம் இன்றி முன்னேற்றம் கிடைக்காது. அரசாங்கத்திடம் பணம் இல்லை. தனியார் துறையினருடன் இணைந்து இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம்.

கேள்வி :

கடந்த காலங்களில் மோசடி செய்யப்பட்ட நிதி​யை மீளப்பெறும் முறைமையொன்று இல்லை. இவ்வாறு பொதுமக்களின் பணத்தை மோசடி செய்வதைத் தடுப்பதற்குரிய சட்டத்தைக் கொண்டு வருவிர்கள் என எதிர்பார்க்கிறோம். அது பற்றிய உங்களது நிலைப்பாடு என்ன?

பதில் :

நாடு என்ற வகையில் நாம் பெருமளவில் கடன் பட்டிருக்கிறோம். அவற்றைச் செலுத்து முடிக்க 2042 வரையில் கால அவகாசம் கேட்டிருக்கிறோம். அதனால் ஓரிருவரிடமிருந்து பணத்தை மீளப்பெற்று இந்த பிரச்சினைக்குக்குத் தீர்வு காண முடியும் என்பது நம்பமுடியாத ஒன்றாகும்.

அதேபோல் நாம் தற்போது புதிய ஆணைக்குழுவை நிறுவியுள்ளோம். எவர் வேண்டுமானாலும் தகவல் வழங்க முடியும். அரசாங்கம் என்ற வகையில் நாம் அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். வழக்கு தொடுக்க முடிந்தவர்களுக்கு அதனைச் செய்வோம். மற்றையவர்கள் தொடர்பிலான சாட்சியங்கள் போதுமானதாக இல்லை. இது தொடர்பில் புதிய ஆணைக்குழுவிற்கு கருத்து தெரிவிக்க முடியும். அந்த பணிகளில் அரசாங்கம் தலையிடாது.

அதேபோல் மோசடியை இல்லாதொழிக்க வேண்டும். அது தொடர்பான பல வழக்குகளை நாம் தொடுத்துள்ளோம். சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவியுள்ளோம். அதற்கு போதிய நிதி இல்லாமையினால் வௌிநாடுகளிடம் உதவி கோரியுள்ளோம்.

நாட்டின் பணத்தை மோசடி செய்தவர்களைத் தண்டித்து பணத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும் அதேநேரம், பொருளாதார முன்னேற்றத்திற்கான வேலைத் திட்டத்தையும் செயற்படுத்த வேண்டும். மேற்படி விடயங்களின் வேறுபாடுகளை அறிந்துச் செயற்படு வேண்டியதும் அவசியமாகும்

கேள்வி:

சினிமா இன்னும் ஒரு தொழில் துறையாக முன்னேறவில்லை. ஒரு தொழில்துறைக்குக் கிடைக்கும் எந்தச் சலுகையும் நமக்குக் கிடைப்பதில்லை. எனவே, ஏனைய தொழில் நிறுவனங்கள் பெறும் சலுகைகளை திரைத்துறையினருக்கும் அளித்து, திரைப்பட விநியோகத்திலுள்ள குறைகளை சரிசெய்து, இத்தொழிலைப் பாதுகாக்க பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பதில்:

திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், ஒரு திரைப்படத்தை உருவாக்கி அதைத் திரையிட சுமார் 5 வருடங்கள் செல்கிறது. ஆனால் ஒரு திரைப்படம் உருவாகிய உடனே அதை பார்வையாளர்களுக்காக திரையிட வேண்டும். தற்போது இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து வருகிறோம்.

மேலும், சினிமா துறையை முன்னேற்றுவதற்கு சிறந்த திரையரங்குகள் அவசியம். எனவே, ஏனைய நாடுகளைப் போல சினிமாவையும் சந்தைக்கு திறந்துவிடுவதன் மூலம் சினிமாத்துறையை வளர்க்க முடியும். ஆனால் இதை எப்படி செய்வது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். முதலீடு செய்த பணத்திற்கு உரிய பலன் கிடைக்காவிட்டால் பொருளாதார ரீதியாக எந்தப் பயனும் இல்லை. எனவே, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

கேள்வி:

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதற்கு விரைவான தீர்வுகளை வழங்கி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டம் குறித்து விளக்கினால்?

பதில்:

இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி நீண்ட காலமாக இருந்து வருகிறது. யுத்தத்திற்குப் பிறகு நமது ஏற்றுமதி குறைந்தது. ஆனால் இறக்குமதி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வர்த்தகக் கையிருப்புத் தொகையில் பற்றாக்குறை ஏற்பட்டது. நாங்கள் விவசாயத்தில் கவனம் செலுத்தவில்லை. நாட்டின் தேயிலை, தேங்காய் மற்றும் இறப்பர் தொழில்கள் வீழ்ச்சியடைந்தன. நமது நிலக் கொள்கைகளால் இந்நாட்டில் தேயிலை பயிரிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் ஆபிரிக்கா, கென்யா போன்ற நாடுகளுக்குச் சென்று தேயிலை பயிரிட்டன. அந்த பயிர்கள் தங்கள் நாடுகளில் நன்றாக விளைந்ததால் அந்த நாடுகள் இப்போது நமக்கு நன்றி தெரிவிக்கின்றன.

நாம் நமது ஏற்றுமதித் தொழில்துறையை வளர்க்கவில்லை. 1991 ஆம் ஆண்டு நான் தொழில் அமைச்சராக இருந்த போது , உங்கள் நாட்டின் தொழில் துறைகளை எவ்வாறு அபிவிருத்தி செய்கிறீர்கள் என்று வியட்நாமின் தொழில் அமைச்சர் என்னிடம் கேட்டார். இப்போது நான் அவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது.

எமது அரசியல்வாதிகள் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கினர். ஆனால் நாங்கள் உண்மையான உலகத்தைப் பார்க்கவில்லை. பங்களாதேஷ் சுதந்திரம் பெற்றபோது அவர்களிடம் பணம் இல்லை. இன்று பங்களாதேஷ் 200 மில்லியன் டொலர்களை எமக்கு வழங்கியுள்ளது. நம் நாட்டுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து நாம் முன்னேற வேண்டும். எனவே வாக்குறுதிகளை வழங்குவதில் அர்த்தமில்லை.

தேசிய பொருளாதாரத்தை முன்னேற்றுவது அவசியம் என்று சிலர் கூறுகின்றனர். தேசியப் பொருளாதாரம் உள்நாட்டுச் சந்தைக்கு மட்டுப்படுத்தப்பட்டால் அது தேசிய பொருளாதாரம் அல்ல. பராக்கிரமபாகு மன்னனுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டியிருந்தது. நாம் ஏன் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு செல்ல முடியாது?

இந்தப் பதவியை வேறு யாரும் ஏற்க முன்வராததால் நான் ஏற்றுக்கொண்டேன். அவர்கள் பொறுப்பேற்க பயந்தார்கள். அதுதான் உண்மை நிலை. ஆனால் இன்னும் வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு விடயங்களை முன்வைக்கின்றனர். இந்த நாட்டு தொழிலதிபர்களின் பணம் வெளிநாட்டில் இருப்பதாகவும், அந்தப் பணத்தை கொண்டு வந்ததும் பிரச்சினை முடிந்துவிடும் என்றும் ஒரு குழு கூறுகிறது. வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்ட பணத்தை அரசியல்வாதிகள் கொண்டு வந்தால் பிரச்சினை முடிந்து விடும் என்கின்றனர் மற்றொரு குழுவினர். அத்துடன், ராஜபக்ஷவின் பணத்தை மீளப்பெற்றதும் பிரச்சினை முடிந்துவிடும் என்றும் கூறுகின்றனர். இதில் எதுவுமே தீர்வு இல்லை.

நாட்டின் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருக்கும் நிலையில் கடன் பெறும் போது, கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது. அதுதான் பல ஆண்டுகளாக நடந்தது.

கடந்த பொருளாதார நெருக்கடி காரணமாக சிலர் நாட்டை விட்டு வெளியேறினர். இப்போது இங்கிலாந்தை விட இலங்கை சிறந்தது என்கிறார்கள். இங்கிலாந்தில் உள்ள பிரச்சினைகளை நம் நாட்டில் உள்ள பிரச்சினைகள் போல் எளிதில் தீர்க்க முடியாது. நம் நாட்டைக் கட்டியெழுப்பவும், முன்னேற்றவும் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

கேள்வி:

சுகாதார அணையாடைகளுக்கு (Sanitary Napkin) நியாயமற்ற முறையில் 47% வரி விதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது உண்மையல்ல என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தார். ஆனால் இது ஒரு பெரிய பிரச்சினையாகிவிட்டது. எனவே, இந்த விவகாரத்தில் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும்

பதில்:

உங்கள் கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார். அடுத்து வரிச் சிக்கல்கள் தவிர இலங்கை ரூபாய் பெறுமதி வீழ்ச்சியும் விலை உயர்விற்கு காரணமாக அமைந்துள்ளது. ஏறக்குறைய சனத்தொகையில் அரைவாசிப் பெண்கள் சுகாதார அணையாடைகளைப் பெறாததால் இது நாட்டில் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. எனவே, அதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

வரி செலுத்தவில்லை என்றால், வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகையை ஈடுகட்டத் தேவையான பணம் கிடைக்காது. வரி விதித்தால் விலை உயரும். எனவே இவையே தற்போது அரசாங்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகள். எனவே இது நாம் கவனம் செலுத்த வேண்டிய விடயங்களாகும்.

கேள்வி:

இந்த ஆண்டு தனியார் வாகனங்களின் இறக்குமதியை தளர்த்துவதில் கவனம் செலுத்துவீர்களா?

பதில்:

அடுத்த ஆண்டு முதல் அதனை படிப்படியாக செயல்படுத்த எதிர்பார்க்கிறோம். வாகன சந்தையில் உள்ள பிரச்சினைகளை நான் அறிவேன். ஆனால் இன்னும் எங்களின் கையிருப்புத் தொகை நல்ல நிலையில் இல்லை. வாகனங்கள் இறக்குமதியைத் தவிர மற்ற அனைத்திற்கும் அனுமதி அளித்துள்ளோம்.

இந்த நிலைமையில், வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால், நாடு பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு முதல் அத்தியாவசிய வாகனங்களை படிப்படியாக இறக்குமதி செய்ய எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளோம்.

PMD News
PMD News
PMD News
PMD News
PMD News
PMD News
PMD News
PMD News
PMD News
PMD News
PMD News
PMD News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *