நாட்டின் முக்கிய சுற்றுலா நகரமாக காலி மாறும்:ஜனாதிபதி

கரையோரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை நாட்டுக்குள் கொண்டு வந்து பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும்

  • ஹோலுவாகொட “செரின் ரிவர் பார்க்” சூழலியல் பூங்காவை திறந்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு.

கடற்கரையோரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை நாட்டிற்குள் கொண்டு வந்து பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் தென்பகுதிக்குத் தனித்துவமான இடம் உள்ளது என்றும் காலியை பிரதான சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

காலி, ஹோலுவாகொட “செரின் ரிவர் பார்க்” சூழலியல் பூங்காவை நேற்று (13) பிற்பகல் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் தெரிவித்தார்.

“2021 ஆம் ஆண்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த பூங்கா 14 ஏக்கர் தரிசு நிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் தலைமையில் இந்தக் கருத்திட்டம் செயற்படுத்தப்பட்டதோடு,நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டத்தின் மதிப்பீடு 440 மில்லியன் ரூபாவாகும். குளம், நடைபாதைகள், இரும்புப் பாலங்கள், சிறுவர் பூங்காக்கள், வர்த்தக நிலையங்கள், சுற்றுச்சூழல் கட்டமைப்புகள் என்பவற்றை உள்ளடக்கியதாக இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது.

பிரதேச மக்களின் விவசாயப் பயிர்கள் மற்றும் ஏனைய உற்பத்திப் பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்யும்வேலைத்திட்டமும் இதன் மூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எதிர்காலத்தில் சுற்றுலாத்துறைக்கு முன்னுரிமை வழங்கி இந்த பூங்காவில் இருந்து வக்வெல்ல, வட்டரெக்க மற்றும் காலி வரை படகு சேவையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பல தசாப்தங்களாக ஹோலுவாகொட மற்றும் ஓபாத பிரதேச மக்கள் எதிர்நோக்கும் வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்தவும் இந்தப் பூங்கா பங்களிக்கும்.

இந்த சூழலியல் பூங்காவை வெற்றிகரமாக நிர்மாணிப்பதில் பங்களிப்பு செய்தவர்களுக்கு ஜனாதிபதி சான்றிதழ்களையும் வழங்கினார்.

மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

இந்தத் திட்டம் ஒரு பொருளாதார மேம்பாட்டுத் திட்டமாகும். நாம் இதுபோன்ற திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். இன்று காலி முக்கிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. அதை நாம் மேலும் மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் இப்பகுதி மக்கள் பெருமளவு வருமானம் பெற முடியும்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் அதே வேளையில் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும். அதன்படி, இந்தப் பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தனியான சட்டம் கொண்டு வரப்படும். இங்கு கட்டிடங்கள் மாத்திரம் இருந்தால் இப்பகுதிகளுக்கு யாரும் வருகை தர மாட்டார்கள்.

சுற்றுலா துறையில் தென் மாகாணத்திற்கு ஒரு சிறப்பிடம் உள்ளது. காலி கோட்டையில் உள்ள அனைத்து அரச அலுவலகங்களையும் அகற்றி சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அத்துடன், முறையான திட்டமிடலின் ஊடாக காலி நகரை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கும் நாம் செயற்பட்டு வருகின்றோம். அதன்படி, நாட்டின் முக்கிய சுற்றுலா நகரமாக காலி மாறும்.

சுற்றுலாத்துறை என்பது நாட்டிற்கு விரைவாக வருமானம் தரும் துறையாகும். அதிக பணம் செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் நாட்டிற்கு அழைத்து வர முயற்சிக்க வேண்டும்.

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எரிபொருள் இருக்கவில்லை. உரமோ மருந்தோ இல்லை. இன்று அனைத்தும் இருக்கிறது. அதேபோன்று மக்கள் பணம் சம்பாதிக்கிறார்கள்.

மேலும், கறுவா விளைச்சலில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தேயிலை பயிருக்கு பொருத்தமான இடங்களில் தேயிலை பயிரிடுவதன் மூலமும், ஏனைய இடங்களில் கறுவா பயிரிடுவதன் மூலமும் அதிக வருமானத்தை ஈட்ட முடியும். அதேபோன்று, இப்பகுதிகளுக்கு தொழில்நுட்ப கல்வி வழங்கும் நிறுவனங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இந்த நடவடிக்கைகளால் காலி பெரும் அபிவிருத்தி அடையும் என நம்புகிறோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சுகாதார மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன:
இத்தகைய மனதைக் குணப்படுத்தும் பூங்காக்கள் முன்பு தலைநகரில் மட்டுமே இருந்தன. இன்று, காலி மக்களுக்கும் சூழலியல் பூங்காவின் அழகை ரசிக்க முடிந்ததுள்ளது. கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, அபிவிருத்திகள் தடைபட்டன. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த பொருளாதார வேலைத்திட்டத்தினால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ஸ்திரத்தன்மை அடைந்து வருகின்றது.

65 வருடங்களாக புனரமைக்கப்படாமல் இருந்த காலி நகரை மீளமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காலியில் இணைந்த சுகாதார பீடத்தின் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற கட்டிடத்தொகுதியின் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில்அதனை ஜூன் மாதம் திறக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2012 ஆம் ஆண்டில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட “ஹெல்வுட் கோல்” மகப்பேறு வைத்தியசாலையின் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதனை எதிர்வரும் 27ஆம் திகதி ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு புதிய சிறுநீரகப் பிரிவை நிர்மாணிப்பதற்காக 100 கோடி ரூபா ஒதுக்கப்படவுள்ளது. இவ் வருடத்தில் இருதய நோய்ப் பிரிவு , CT ஸ்கேன் ஆகியவற்றுக்காக 800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்கும் நிலையிலும் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தினால் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்க முடிந்துள்ளது.

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர:
அமைச்சர் ரிச்சர்ட் பத்திரன காலி நகரத்திற்கும் கல்வித் துறைக்கும் அளப்பரிய சேவையாற்றினார். அந்த சேவையை அமைச்சர் ரமேஷ் பத்திரன தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருகிறார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் பொறுப்பேற்றார். மக்கள் எரிபொருள் வரிசையில் நின்று உயிரிழந்தனர். உரம் இன்றி விவசாயிகள் வீதியில் இறங்கி போராடினர். இதன்போது பொருளாதாரத்தை பலப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர், நாட்டுக்கு தேவையான எரிபொருளை பெற்றுகொடுத்து, விவசாயிகளுக்கு அவசியமான உரத்தையும் பெற்றுகொடுத்தமையால் விவசாயிகள் மீண்டும் விளைச்சல் நிலங்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் இந்த நாட்டுக்கு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. ஆனால், 2023 ஆம் ஆண்டில் நாட்டின் தேவைக்கு அவசியமான அரிசி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கறுவாச் செய்கையை மேம்படுத்துவதாக வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, அதற்கான தனியான திணைக்களத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கான பணிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டு மக்கள் வாழக்கூடிய சூழலை உருவாக்குவார் என நம்புகிறோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தென் மாகாண ஆளுநர் விலி கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, சம்பத் அத்துகோரல உள்ளிட்ட பல அரசியல் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

PMD News
PMD News
PMD News
PMD News
PMD News
PMD News
PMD News
PMD News
PMD News
PMD News
PMD News
PMD News
PMD News
PMD News
PMD News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *