மட்டக்களப்பு இந்து கல்லூரி மாணவ விடுதி கையளிப்பு!!

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவர்களுக்கான தங்குமிட விடுதி மீளமைப்பு செய்யப்பட்டு மீண்டும் மாணவர்களுக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் எல்லை புர கிராம மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை கருத்திற் கொண்டு இந்துக் கல்லூரியில் நிர்வகிக்கப்பட்டு வந்த மாணவர்களுக்கான தங்குமிட விடுதி கடந்த கால அசாதாரண சூழ்நிலை மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர் விடுதி மீண்டும் மீளமைக்கப்பட்டு மாணவர்களுக்காக கையளிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் பகீரதன் தலைமையில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு பின்தங்கியோர் அபிவிருத்தி சங்கம் ஐக்கியராட்சியம் (BUDS-UK) அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கல்வி மேம்பாட்டு செயல்திட்டத்தின் ஓர் அங்கமாக லண்டனில் புலபெயர்ந்து வாழும் இந்து கல்லூரியின் பழைய மாணவர்களினால் குறித்த மாணவர் விடுதி மீளமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு செயல்பாடாக மட்டக்களப்பு இந்து க்கல்லூரியை கல்வி கற்றல் செயல்பாட்டில் மேம்படுத்தும் வகையில் கல்லூரியில் கல்வி பயிலும் எல்லை புர கிராம மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை அபிவிருத்தி செய்யும் வகையில் மாணவர்களை விடுதியில் தங்க வைக்கப்பட்டு

மாணவரின் கல்வி அடைவை மேம்படுத்த வைக்கும் வகையில் கற்றல் செயல்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்த வகையில் பின்தங்கியோர் அபிவிருத்தி சங்கம் ஐக்கியராட்சியம் (BUDS-UK) அமைப்பினால் மட்டக்களப்பு நலிவுற்ற அபிவிருத்தி சங்கத்தின் ஊடாக மீளமைக்கப்பட்ட மாணவர்களுக்கான விடுதியை மீள திறந்து வைக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளர் (நிர்வாகம்) ஷாமினி ரவிராஜ், உடற்கல்வி பணிப்பாளர் வீ.லவ்குமார், UK – BUDS அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் பி. ஜெயகுமார், மட்டக்களப்பு நலிவுற்ற அபிவிருத்தி சங்கம் தலைவர் எல்.ஆர்.டேவிட், சங்கத்தின் செயலாளர் சசிதரன், பொருளாளர் சடாச்சரராஜா, பொறியியலாளர் கோபிநாத், மட்டக்களப்பு நலிவுற்ற அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள், மாணவர்கள் பெற்றோர்கள், கல்லூரி பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *