கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபை ரீதியான அனர்த்த அபாயக் குறைப்பு திட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கமைப்பில் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில், பூநகரி பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மட்ட அனர்த்த அபாய குறைப்பு செயற்றிட்ட தயாரிப்பு செயலமர்வின் இறுதிநாளான மூன்றாம் கட்ட செயலமர்வு இன்று(13) நடைபெற்றது.
குறித்த செயலமர்வு கிளிநொச்சி மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில், பூநகரி பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வின் வளவாளர்களாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சி.கோகுலராஜா கலந்து கொண்டிருந்தார்.
இத் திட்டமானது பூநகரி பிரதேசத்தில் திண்மக்கழிவு, தொற்று நோய்கள் குறிப்பாக டெங்கு, குடியிருப்புக்களில் ஏற்படும் வெள்ளம், வயல் நிலங்கள் மற்றும் தாழ் நிலங்களை மண் இட்டு நிரப்புவதால் ஏற்படும் வெள்ளம், இயற்கையான நீரோட்டங்களை மக்கள் தடைசெய்தல் மற்றும் மண் இட்டு நிரப்புவதால் ஏற்படும் வெள்ளம், குளங்கள்,குட்டைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மக்கள் அத்துமீறிய அபகரிப்பு காரணமாக ஏற்படும் வெள்ளம், சட்டவிரோத மணல் அகழ்வால் ஏற்படும் வெள்ளம், வறட்சி மற்றும் உவர்நீர் தாக்கம், வீதிகளில் திரியும் கால்நடைகளால் ஏற்படும் வீதி விபத்துக்கள், A32, B357 வீதியில் ஏற்படும் வீதி விபத்துக்கள், காட்டுத் தீ ஏற்பட சாத்தியமான இடர்களை முன்னுரிமை அடிப்படையில் முகாமைத்துவம் செய்யும் செயற்பாடுகளை முன்மொழிகின்றது.
இதனூடாக பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் இடம்பெறும் அனர்த்தங்கள் தொடர்பான அனர்த்த அபாய குறைப்பு மதிப்பீட்டு செயற்பாடுகளை அறிக்கையாக்கி இறுதித் திட்டம் வடிவமைக்கப்பட்டு இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டது.
மேலும், மூன்று கட்டமாக தயாரிக்கப்பட்ட குறித்த வேலைத் திட்டங்களை பூநகரி பிரதேச சபை முன்னெடுத்துச் செல்லும். பெரும்பாலான வேலைத் திட்டங்கள் நிதி ஒதுக்கீடுகளின்றி முன்னெடுத்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் எதிர்காலத்தில் அனர்த்தங்கள் இடம்பெறுகின்றபோது ஏற்படுகின்ற பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள முடியும்.
இந் நிகழ்வில் பூநகரி பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அருள்செல்வன், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உத்தியோகத்தர்கள், பூநகரி பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி திணைக்கள உத்தியோகத்தர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், நீர்வள திணைக்கள உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
.