– வெஸ்லி கல்லூரியின் 150 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவில் ஜனாதிபதி
சாவால்களைக் கண்டு தப்பி ஓடாமல், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமது கொள்கைகளில் உறுதியாகவிருந்து, முன்னேற்றிச் செல்லும் சந்ததியை, இந்நாட்டுக் கல்வியின் மூலம் உருவாக்கி, வலுவூட்ட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
கொழும்பு சங்கரீ லா ஹோட்டலில் நேற்று (11) நடைபெற்ற வெஸ்லி கல்லூரியின் 150 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டுக்குத் தேவையான பிரஜைகளை உருவாக்குவதற்கு வெஸ்லி கல்லூரி முன்னோடிச் சேவையாற்றியுள்ளதெனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக நன்றியும் கூறினார்.
கொழும்பு வெஸ்லி கல்லூரி 1874 ஆம் ஆண்டு பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் போது மெதடிஸ்ட் மிஷனரி கல்வி முறையின் கீழ் நிறுவப்பட்டது. இக்கல்லூரி இலங்கையின் சுதந்திரப் போரின் முன்னோடிகள், ஆளுநர்கள், ஜெனரல்கள், அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கைக்குச் சேவையாற்றிய பல முக்கியஸ்தர்களை உருவாக்கியிருந்தது.
இந்த நிகழ்வில் “செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் எதிர்கால கற்பித்தல் முறைமை” என்ற தலைப்பில் கல்லூரியின் பழைய மாணவரும் ஐக்கிய அமெரிக்காவின் சென் டியோக் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஆர்.சோமநாதன் சிறப்புரை ஆற்றினார்.
எல்ஸ்டன் கொக், லெனரோல் சசோரர்கள் உள்ளிட்ட பிரசித்தமான பாடகர்களின் நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.
இந்த ஆண்டுப் பூர்த்தி விழாவிற்கு ஜனாதிபதியின் வருகையை அடையாளப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட விசேட நினைவு பரிசொன்றும் 150 ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு வௌியிடப்பட்ட சஞ்சிகையொன்றும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டன.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
”வெஸ்லி கல்லூரிக்கு 150 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவில் பங்கேற்கக் கிடைப்பது மகிழ்ச்சிக்குரியது.
அதேபோல் சுதந்திர இலங்கையைக் கட்டியெழுப்புதற்கு வெஸ்லி கல்லூரி ஆற்றிய சேவைக்கும் நன்றி கூறுகிறேன்.
இக்கல்லூரியின் ஆண்டுப் பூர்த்தி விழாவொன்றில் இரண்டாவது தடவையாக பங்கேற்கிறேன். வெஸ்லி கல்லூரி நாட்டிற்கு ஆற்றியுள்ள சேவைகளைக் கருத்தில் கொண்டு இதில் பங்கேற்க நினைத்தேன்.
தேசத்தைக் கட்டியெழுப்பிய பிரஜைகளை உருவாக்கும் பணியில் வெஸ்லி கல்லூரி அளப்பரிய சேவையை ஆற்றியுள்ளது. வெஸ்லி கல்லூரி பிரஜைகளையும், தலைவர்களையும் உருவாக்கியது. அவர்கள் தேசத்தை வடிவமைத்தனர்.
1915 ஆம் ஆண்டில் வெஸ்லி கல்லூரியின் அதிபர் ஹென்ரி ஹயிபீல்ட் ஆற்றிய சேவையை நினைவுகூற வேண்டும். அவர் இலங்கைக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர்களின் உயிர்களைப் பாதுகாக்க முன்வந்தவர்களில் ஒருவர். எப்.ஆர். சேனநாயக்கவின் மறைவின் பின்னர் வெற்றிடமாக காணப்பட்ட தலைமைப் பதவியை பரோன் ஜயதிலக்க ஏற்றுக்கொண்டார்.
அவர் நாட்டு மக்களின் எண்ணங்களை சீராக்கினார். சர்வஜன வாக்கெடுப்பினால் தெரிவு செய்யப்பட்ட சபைக்குள் பணியாற்றும் வகையில் எங்களைப் பயிற்றுவித்தார். ஆசியாவில் எமது நாட்டிற்கே முதலாவதாக சர்வஜன வாக்குரிமை பெற்றுக் கொடுக்கப்பட்டது. அதனால் அவர் ஆற்றிய சேவைக்குக் கடன்பட்டிருக்கிறோம். அதேபோல் அவரால் நிறுவப்பட்ட வெஸ்லி கல்லூரிக்கும் கடன்பட்டிருக்கிறோம்.
அதேபோல் வர்த்தகத்தில் பயன்படுத்த வேண்டிய மூலோபாய முறைமைகளை எமக்கு சொல்லித் தந்த ஒலிவர் குணதிலக்கவையும் வெஸ்லி கல்லூரியே உருவாக்கியது. 1942 ஆம் ஆண்டில் கொழும்பின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து எனது பெற்றோர் கூறியுள்ளனர். அக்காலத்தில் அதனை நேரில் கண்டவர்கள் அவற்றை மறக்கவும் இல்லை.
சுதந்திரம் பெற்றுகொள்வதற்காக டீ.எஸ்.சேனநாயக்க ஒலிவரை லண்டனுக்கு அனுப்பினார். நீங்கள் அதனை மறந்துவிட்டீர்கள். 1919 ஆம் ஆண்டு இனவாத மோதல்களின் போதும், 1958 களின் போதும் அவர் நாட்டின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
பிரதமரும் நாட்டின் நிர்வாகமும் முடங்கிப் போன வேளையில் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை அவரே ஏற்றுகொண்டார். அதேபோல் மறைந்த பிரதமர் பண்டாரநாயக்க கொல்லப்பட்ட காலத்திலும் அவரே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுகொண்டார். நாட்டில் சுமூக நிலையையும் ஏற்படுத்தினார். மேற்படி இருவரையும் உருவாக்கிய வெஸ்லி கல்லூரி இலங்கைக்கு பாரிய சேவை ஆற்றியுள்ளது.
அதிகாரம், வலிசிங்க ஹரிச்சந்திர உள்ளிட்ட விளையாட்டுத்துறை, ஏனைய துறைசார் முன்னோடிகள் பலரையும் இந்த கல்லூரி உருவாக்கியுள்ளது. அதனால் ஒட்டுமொத்த தேசமும் வெஸ்லி கல்லூரிக்கு கடன்பட்டுள்ளது. அதனால் உங்களுடைய பாடசாலையும் எனது பாடசாலையும் சிறந்த பிரஜைகளை உருவாக்குவதையே முதற் கடமையாகச் செய்துள்ளது. அவர்கள் எழுச்சியை உருவாக்க கூடியவர்களாகவும், தீர்மானங்களை எடுக்கக் கூடியவர்களாகவும், அச்சமற்ற பிரஜைகளாகவும் உருவாக்கப்பட்டனர்.
இந்த பாடசாலையில் பல சிரேஷ்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். அதனாலேயே இன்றும் நாம் எமது நாட்டுக்கு சேவையாற்றுகிறோம். தப்பியோடுவதற்கு நானும் நீங்களும் படிக்கவில்லை. மாறாக எமது கொள்கைகளில் உறுதியாகவிருந்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னேறிச் செல்லவே நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.
கல்வி முறையினால் அந்த படிப்பினையே கிடைக்க வேண்டும். பாடநூல் கல்வி, புதிய தொழில்நுட்பம், விளையாட்டு என பல துறைசார் விடயங்களையும் நீங்கள் கற்க வேண்டும்.
தற்போது நாம் பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பிலான சங்கங்களை உருவாக்க உள்ளோம். AI தொடர்பிலான சட்டத்தையும் கொண்டுரவுள்ளோம். செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான ஆய்வுகளுக்காகவும் ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறோம். இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் போது நாம் சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணிக்க முடியும்.
நாம் கல்வி கற்ற காலத்தில் அரச பாடசாலைகள், தனியார் மற்றும் உதவிகளைப் பெற்று இயங்கும் பாடசாலைகள் என பல பிரிவுகள் இருந்தன. துரதிஷ்டவசமாக நீங்கள் அனைவரும் அரசாங்க பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகள் என இரு பிரிவுகளுக்குள் மாத்திரம் சிக்கிக்கொண்டுள்ளீர்கள். அதனால் கல்வி முறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
அதேபோல் நாட்டிற்கு சேவையாற்றிய பாடசாலைகளுக்கு உதவி செய்யும் திட்டமொன்றை முன்மொழியவும் எதிர்பார்க்கிறோம்.
நீங்கள் இந்த நாட்டுக்கு சேவையாற்றியுள்ளீர்கள். இன்னும் பல சேவைகளை செய்யலாம். அதற்குத் தேவையான மாற்றங்களை நாம் ஏற்படுத்துவோம். அதற்கான புதிய திட்டங்கள் பலவும் கல்வி அமைச்சரிடம் உள்ளன.
கொவிட் காரணமாக பரீட்சைகளை நடத்தும் காலப்பகுதி தொடர்பில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன. ஆங்கிலக் கல்வியை ஊக்குவிக்க வேண்டிய பல பாடசாலைகள் உள்ளன. வெஸ்லி கல்லூரி போன்ற பாடசாலைகளுக்கு அது தொடர்பிலான பெரும் பொறுப்புகள் உள்ளன. இக்கல்லூரி இலங்கையை வடிவமைத்த கல்லூரி என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். எதிர்காலத்திலும் அதனை செய்ய முடியும் என நம்புகிறேன். ” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகள் பெட்ரிக், இலங்கை மெதடிஸ்ட் திருச்சபையின் பிரதம பாதிரியார் எபினேசர் ஜோசப், பிரித்தானிய மெதடிஸ்ட் தேவாலயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பார்பரா ஈஸ்டன் அமையார் மற்றும் மார்ட்டின் ஈஸ்டன் கிரேட், மெதடிஸ்ட், ஆங்கிலிகன் மற்றும் பாப்டிஸ்ட் தேவாலயங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மதகுருமார்கள் உட்பட மதகுருமார்கள், வண. பெர்ரி ப்ரோஹியர் உள்ளிட்ட வெஸ்லி கல்லூரியின் நிர்வாகிகள், வெஸ்லி கல்லூரி அதிபர் அவந்த பெர்னாண்டோ,ஜேர்மனிய வர்த்தகரும் அரசியல்வாதியுமான இயன் கரன் மற்றும் அவரது பாரியார், பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத் தலைவர் கெப்டன் நவீன் டி சில்வா உட்பட பழைய மாணவர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.