2024 ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் மும்பை – விதர்பா அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் சதம் அடித்து தன் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார் 19 வயதே ஆன முஷீர் கான்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் மும்பை – விதர்பா அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் முதலில் மும்பை அணி பேட்டிங் செய்து 224 ரன்கள் எடுத்தது. ஷர்துல் தாக்குர் 75 ரன்கள் சேர்த்து மும்பை அணி 200 ரன்கள் கடக்க காரணமாக இருந்தார். அடுத்து ஆடிய விதர்பா அணி 105 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தது.
அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடிய மும்பை அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது. மூன்றாம் வரிசையில் இறங்கிய 19 வயதே ஆன முஷீர் கான் 255 பந்துகளை சந்தித்து சதம் அடித்தார். பின் 136 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த சதம் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 29 ஆண்டு கால ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி சாதனையை முஷீர் கான் முறியடித்து மிக இளம் வயதில் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்து இருக்கிறார்.
1995 ஆம் ஆண்டு நடந்த ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக போட்டியில் மும்பை அணியின் சச்சின் டெண்டுல்கர் தன் 21 வயதில் சதம் அடித்து இருந்தார். ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் மிக இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்து இருந்தார் சச்சின் டெண்டுல்கர்.
அந்த சாதனையை 29 ஆண்டுகள் கழித்து அதே மும்பை அணியை சேர்ந்த முஷீர் கான் முறியடித்து இருக்கிறார். முஷீர் கானை தொடர்ந்து ரஹானே 73 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 95 ரன்களும் சேர்த்தனர். இதை அடுத்து மும்பை அணி 418 ரன்கள் குவித்தது. விதர்பா அணிக்கு 538 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறது மும்பை அணி.