நாட்டின் பிரதான வைத்தியசாலைகளின் நோயாளர்களுக்கான நெருக்கடிகளைக் குறைப்பதாயின் கிராமிய வைத்தியசாலைகளுக்கு அவசியமான வசதிகளை வழங்க வேண்டும்..
நாட்டின் பிரதான வைத்தியசாலைகளின் நோயாளர்களுக்கான நெருக்கடிகளைக் குறைப்பதாயின் கிராமிய வைத்தியசாலைகளுக்கு அவசியமான வசதிகளை வழங்கி, அவற்றை உறுதியாக வலுப்படுத்தி அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும், ஆதார, தள, என சுகாதார சேவைகளை வலுப்படுத்த வேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீபால தெரிவித்தார்.
வடமத்திய மாகாணத்தின், அநுராதபுர மாவட்டத்தில், அநுராதபுர போதனா வைத்தியசாலை, கெபிதிகொல்லேவ, மதவாச்சி மற்றும் பதவிய ஆதார வைத்தியசாலைகள், ஏதாகட ஆரம்ப மருத்துவ உதவிப் பிரிவு ஆகியவற்றில் காணப்படும் ஆளணி மற்றும் பௌதீக வளங்களின் குறைபாடுகளை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வு வழங்குவதற்கான விசேட கண்காணிப்புச் சுற்றுப்பயணமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே (09) சுகாதார அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரணவின் கோட்பாடுகளுக்கு இணங்க அரசாங்கத்தின் வைத்தியசாலைக் கட்டமைப்புக்களை மிகவும் முறையாக மற்றும் அதிக வசதிகளுடன் கூடிய நோய் நிவாரண சேவைகளுடன் நடைமுறைப்படுத்துவதை அடிப்படை இலக்காகக் கொண்டு மாவட்ட மட்டத்தில் அவ்வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை கண்டுபிடித்து அவற்றுக்கு விரைவாகத் தீர்வை வழங்குவதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர் தலைமையிலான அமைச்சின் அதிகாரிகள் இவ்விசேட கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த செயலாளர், அநுராதபுர போதனா வைத்தியசாலைக்கு அவசியமான வைத்திய உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக 250 மில்லியன் ரூபா நிதி வழங்குவதற்கும், அது தவிர சுகாதார அமைச்சின் ஊடாக 180மில்லியன் ரூபா நிதியுதவி பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், வைத்தியசாலையின் திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
அவ்வாறே மதவாச்சிய, ஏதாகட, கெபிதிகொல்லேவ, பதவிய போன்ற வைத்தியசாலைகளுக்கு அவசியமான வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்களை விரைவாக இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
மேலும், இவ்வைத்தியசாலைகளினால் விரைவான, தராமான சுகாதார சேவைகக்கான வைத்திய உபகரணங்களை வழங்குவதற்காக ஒவ்வொரு வைத்தியசாலையின் அவசியத்திற்கேற்ப அதனை அபிவிருத்தி செய்வதற்காகவும் அவசியமான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
கிராமிய வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக குறுகிய, நடுத்தர மற்றம் நீண்டகாலத் திட்டங்களின் கீழ் விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் செயலாளர் மேலும் விபரித்தார்.
இக்கண்காணிப்பின் போது சுகாதார செயலாளர் உட்பட அதிகாரிகளினால் வைத்தியசாலைகளின் விடுதிகள், சாய்சாலைகள், விசேட சத்திர சிகிச்சைப் பிரிவு, ஆரம்ப சிகிச்சைப் பிரிவு, கதிரியக்கப் பிரிவு, நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டம், மருந்தகம் உட்பட ஏனைய பிரிவுகளையும் பார்வையிட்டனர்.
சுகாதார செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீபால வினால் வைத்தியசாலைகளுக்கு அசியமான மருந்துகள் பற்றாக்குறையின்றி காணப்படுகின்றதா என்றும், வைத்தியசாலை ஊடாக வழங்கப்படும் சேவைகள் தொடர்பாகவும், மருந்துப் பற்றாக்குறை குறித்த தனிப்பட்ட விசாரணைக்கு உட்படுத்தியதுடன் வைத்தியசாலைகளினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக அங்கு வருகை தந்த மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டனர்.
இக்கண்காணிப்புப் பணியில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சாலிந்த பண்டார, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஜீ. விஜேசூரிய, பணிப்பாளர்களான வைத்தியர் பிரியந்த கருணாரத்ன, வைத்தியர் பிரியந்த அத்தபத்து, வடமத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித பண்டார மற்றும் விசேட வைத்தியர்கள், வைத்தியர்கள், தாதிகள், சுகாதாரத் துறைப் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.