கஸ்தூரி ராஜா கதைக்கு 2 மணி நேரத்தில் உயிர் கொடுத்த இளையராஜா..

கஸ்தூரி ராஜா 12 வருடமாக உருவாக்கிய கதைக்கு 2 மணி நேரத்தில் உயிர் கொடுத்த இளையராஜா..

தமிழ்த் திரையுலகில் பாரதிராஜாவிற்கு அடுத்த படியாக மண் சார்ந்த கதைகளையும், கிராமத்து அழகையும் காட்டியவர் இயக்குநர் கஸ்தூரிராஜா. இயக்குநர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், விசு ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

தனது முதல் படத்திலேயே முரட்டு உருவமும், முறுக்கு மீசையும் கொண்ட ராஜ்கிரணை கதாநாயகனாக்கி அவருக்கு ஜோடியாக அதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த மீனாவினை கதாநாயகியாக்கி திருப்பு முனை கொடுத்தார்.

மேலும் இயக்குநராக மட்டுமின்றி, பாடலாசியராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் பன்முகம் கொண்ட கலைஞராக கஸ்தூரிராஜா விளங்கி வருகிறார். தனது பெரும்பாலான படங்களுக்கு இசைஞானி இளையராஜாவையே இசையமைக்க வைத்து மண்மணம் சார்ந்த பல ஹிட் பாடல்களை தனது படங்களில் கொடுத்துள்ளார்.

தனது முதல் படமான என் ராசாவின் மனசிலே படத்தினை உதவி இயக்குநராக இருந்த போதே எழுதிய கஸ்தூரிராஜா 12 வருடங்களுக்கு மேல் இந்தக் கதையை செதுக்கி வைத்திருந்தாராம். மேலும் ஒரு முரட்டு தோற்றம் கொண்ட ஹீரோவும், அப்பாவி முகம் கொண்ட ஹீரோயினும் இந்தக் கதைக்கு ஏற்றவர்கள் என்பதால் ராஜ்கிரணிடம் கதையைச் சொல்லியிருக்கிறார்.

இக்கதை ராஜ்கிரணுக்குப் பிடித்துப் போக அவரே தயாரிப்பாளராகவும் மாறி ஹீரோவாகவும் நடித்துள்ளார். 1991-ல் வெளியான இந்தப் படம் வெள்ளி விழா கண்டது. இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் இசைஞானி இளையராஜா. படத்தினை தன் பின்னனி இசையாலும், பாடலாலும் தூணாகத் தாங்கிப் பிடித்தவர்.

ஒருமுறை இப்படத்திற்கு இசையமைப்புப் பணியில் இருந்த போது கஸ்தூரி ராஜாவிடம் படத்தினைப் பார்த்து விட்டு மேலும் ஏதாவது காட்சிகள் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். கதைப்படி இந்த இடத்தில் இப்படி ஒரு காட்சி இருந்தால் அதற்கும் ஒரு டியூன் போடலாம் என்று ஆலோசனை சொல்ல கஸ்தூரிராஜா அப்போது எடிட்டிங்கில் வெட்டி எடுக்கப்பட்ட சில பாகங்களைக் கொடுத்திருக்கிறார்.

இசைஞானி அந்தக் காட்சிகளைப் பார்த்து விட்டு உருவாக்கிய பாடல் தான். ‘பெண்மனசு ஆழமுன்னு ஆம்பளைக்கும் தெரியும்..‘ என்ற பாடல். இளையராஜாவே இந்தப் பாடலை உருவாக்கி, அதை அவரே பாடி தகுந்த இடத்தில் வைத்து ஒட்டு மொத்த படத்தையும் ஹிட் கொடுத்திருக்கிறார்.

கஸ்தூரிராஜா 12 வருடங்களாக உருவாக்கிய ஒரு கதையை ரீ-ரிக்கார்டிங்கில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஒரு பாடலை எழுதிப் பாடி பதிவு செய்திருக்கிறார் இளையராஜா. இப்படி இயக்குநர் கூட யோசிக்காத ஒரு காட்சியை அவருக்கு ஆலோசனை கூறி தகுந்த இடத்தில் வைத்து ஒவ்வொரு படத்தின் வெற்றிக்குப் பின்னும் தனது அயராத உழைப்பினைக் கொட்டியிருக்கிறார் இளையராஜா.

May be an image of 3 people and musical instrument

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *