இந்தியா மாஸ் வெற்றி..அதிரடி சரவெடி!

இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது போட்டியில், இந்திய அணி அபார வெற்றியைப பெற்றுள்ளது.

ஒரு இடத்தில் கூட, இங்கிலாந்து அணியை முன்னேற விடாமல், தொடர்ந்து அபாரமாக செயல்பட்ட இந்திய அணி, 5ஆவது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுள்ளது.

டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியை, இந்திய ஸ்பின்னர்கள் கதறவிட்டனர். குறிப்பாக, குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும், அஸ்வின் 4 விக்கெட்களையும் கைப்பற்றி, இங்கிலாந்தை சுருட்டினர்.

பேட்டர்களுக்கு சாதகமான தர்மசாலா பிட்சில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களை தான் அடித்தது. அந்த அணியில், ஓபனர் ஜாக் கிரோலி (79) மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தார். மற்றவர்களில் யாரும் 30+ ரன்களை கூட தொடவில்லை.

அடுத்து, முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இந்திய அணியில், முதல் 5 பேட்டர்களும் 50+ ரன்களை குவித்து அசத்தினார்கள். ரோஹித் சர்மா (103), ஷுப்மன் கில் (110) ஆகியோர் சதம் அடிக்க, யாஷஸ்வி ஜெய்ஷ்வால் (57), தேவ்தத் படிக்கல் (65), சர்பரஸ் கான் (56) ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து, டெய்ல் என்டர்ஸ் குல்தீப் யாதவ், ஜஸ்பரீத் பும்ரா இருவரும் தொடர்ந்து அபாரமாக விளையாடி அசத்தினார்கள். குல்தீப் யாதவ் 30 ரன்களை சேர்க்க, பும்ரா 20 ரன்களை குவித்து அசத்தினார். இதனால், இந்திய அணி 477/10 ரன்களை குவித்து, மெகா முன்னிலையை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய இங்கிலாந்து அணி, தொடர்ந்து படுமோசமாக சொதப்பி வருகிறது. ஓபனர்கள் கிரோலி (0), டக்கெட் (2) இருவரையும் அஸ்வின் வெளியேற்றினார். பேர்ஸ்டோ 39 ரன்களை எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஸ்டோக்ஸ் (2) ரன்களை தான் எடுத்தார்.

இங்கிலாந்து அணி 103/5 ரன்களை எடுத்து, 156 ரன்கள் பின்தங்கியதால், அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் எனக் கருதப்பட்டது. அப்போது, ரூட் மட்டும் தனியொருவனாக போராடி 84 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில், இங்கிலாந்து அணி 195/10 ரன்களை எடுத்து, இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
முதல் டெஸ்டில் தோற்றப் பிறகு, தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றிருப்பது, 112 டெஸ்ட் வரலாற்றில் இதுதான் முதல்முறையாகும். WTC புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 64 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து அணி 60 சதவீத புள்ளிகளுடன் 2ஆவது இடத்தையும், ஆஸ்திரேலியா 59 சதவீத புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இப்போட்டியில் அபார வெற்றியைப் பெற்றதன் மூலம், டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று பார்மெட்டிலும், ஐசிசி தவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *