முன்மொழியப்பட்டுள்ள ஒரு இலட்சம் ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில் திட்டம் நிதி நெருக்கடியிலுள்ள மாணவர்களுக்கு பெரும் உதவியாக அமையும் – கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தியலுக்கு அமைய 2024/2025 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட “ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்” திட்டம் பொருளாதார நெருக்கடியிலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களை இலக்காகக் கொண்டு புதிதாக 20 வலயக் கல்வி அலுவலங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
“2024/2025 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட ‘ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்’ திட்டம் பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடிப்பதற்கு பெரும் ஆதரவை வழங்கும் என்பதைக் கூற வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, கல்வியில் திறமை காட்டினாலும், கல்வியைத் தொடரும் வாய்ப்பை இழக்க, குடும்ப வருமானம் இன்மை ஒரு காரணமாக இருக்கக் கூடாது. எனவே, நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கும் எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
மேலும், கல்விச் சீர்திருத்தங்களில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளோம். பாடசாலையில் தரம் 13 இல் நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் தரம் 12 இல் நடத்த எதிர்பார்த்துள்ளோம். மேலும், தற்போது தரம் 11 இல் நடத்தப்படும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை தரம் 10 இல் நடத்தவும் எதிர்பார்த்துள்ளோம்.
பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் வயதை மேலும் ஒரு வருடத்தினால் குறைப்பதே இதன் நோக்கமாகும். அதன்படி, தொழில் வாய்ப்புகளுக்காக விண்ணப்பிப்பதில் பட்டதாரிகளாக இளம் வயதிலேயே பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறுவதும் அவர்களுக்கு முக்கியமானது என்பதைக் கூற வேண்டும்.
மேலும், முதலாம் தரத்திற்கு முன்னதாகவே சிறு குழந்தைகளுக்கு (Pre – Grade) வகுப்புகளைத் தொடங்கவும் தயாராக உள்ளோம். இன்று பிறக்கும் குழந்தைகள் எதையும் மிக விரைவாகப் புரிந்து கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதை அடிப்படையாக வைத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது நாடு முழுவதும் சுமார் 100 வலயக் கல்வி அலுவலகங்கள் உள்ளன. புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் கல்வித் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் வலயக் கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கையை 120 ஆக அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பாடசாலைக் கல்வியின் தரத்திற்காக எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்பதை குறிப்பிட வேண்டும். பாடசாலைக் கல்விக்காக பல பாடசாலை இணைத்து ஒரு கொத்தணிக் கல்வி முறையை அறிமுகப்படுத்த உள்ளோம்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர்கள், அதிபர்களும் நியமிக்கப்பட உள்ளனர். தற்போதுள்ள அதிபர் தர வெற்றிடங்களுக்குத் தேவையான ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளவும் நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்” என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் மேலும் தெரிவித்தார்.