தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சரித்திரம் படைப்போம் என்ற சூளுரையுடன் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை விஜய் அறிமுகம் செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை விஜய் தொடங்கினார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் 2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு தங்களது பணி தொடரும் என அறிவித்தார்.
இதையடுத்து, தங்களது கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார். இதன் ஒருபகுதியாக, மகளிரை கவுரவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மகளிர் தலைமையில் புதிய அணி ஒற்றை நேற்று (மார்ச்-7) அறிவித்தார்.
அதன்படி, மாநில செயலாளராக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜயலட்சுமி, மாநில இணைச் செயலாளராக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த யாஸ்மின் என்பவரையும் நியமித்தார். அத்துடன், மாநில பொருளாளராக கோவையை சேர்ந்த சம்பத்குமார், மாநில துணைச் செயலாளர்களாக மதுரையை சேர்ந்த விஜயன்பன் கல்லணை மற்றும் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பிரபு ஆகியோரையும் நியமித்தார்.
இந்நிலையில், மகளிர் தினமான இன்று சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அறிமுக விழா நடைபெற்றது. அப்போது, உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை காணொலி காட்சி மூலம் கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்து, முதல் உறுப்பினராக அவர் இணைந்தார். அப்போது பேசிய அவர், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி வரப் போகிற சட்டமன்றத் தேர்தலை நோக்கி, தன்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய, நாங்க ஏற்கனவே வெளியிட்ட கட்சியின் உறுதி மொழியை படிங்க என்று கூறினார். அது அனைவருக்கும் பிடித்திருந்தால் விருப்பப்பட்டால் இணைஞ்சிடுங்க” என்று கேட்டுக்கொண்டார்.
இதை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி வெளியிடப்பட்டது. அதில், “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக் காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் வெற்றிகான தமது பயணத்தில், தோழர்களாக இணைந்து மக்கள் பணி செய்ய விரும்பினால், கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டு உறுப்பினர் சேர்க்கைக்கான QR- Code இணைப்புகளை பயன்படுத்தி மிகவும் எளிய முறையில் உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என விஜய கூறியுள்ளார். இதற்காக, வாட்ஸ்-அப் மூலம் ‘TVK’ என டைப் செய்து 09444-00-5555 அனுப்பினால் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம்.