பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பது வெறும் பேச்சில் மட்டும் நின்றுவிடக் கூடாது
இந்த ஆண்டு மகளிர் தினத்தைக் கொண்டாடும் பெண்கள், சட்டத்தின் அதிகாரம் மற்றும் பாதுகாப்புடனேயே வீடு திரும்புகின்றனர்.
- ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் மே மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
- ஆசியாவிலேயே முதன்முறையாக ஆண், பெண் சமூக அடிப்படையைக் கொண்ட வரவு செலவுத் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
- பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும்.
- நாடு பூராகவும் உள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரப் பிரிவு- ஜனாதிபதி.
ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் இரண்டும் எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டத்தின் பிரகாரம் தனியான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அரசியலமைப்பின்படி பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறிமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கும் வலுவூட்டலுக்குமான ஏற்பாடுகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இன்று (8) முற்பகல் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின தேசிய கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் நேற்று (7) வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாகவும், ஆண், பெண் சமூக சமத்துவ சட்டமூலம் எதிர்வரும் வாரத்தில் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், ஆண், பெண் சமூக அடிப்படையைக் கொண்ட வரவு செலவுத் திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், இது ஆசியாவிலேயே முதன்முறையாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவு ஸ்தாபிக்கப்படும் எனவும், அதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறினார்.
இதுவரையில் எமது நாட்டில் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் பெண்களின் உரிமைகள் பற்றி பேசுவதாக மாத்திரமே இருந்த போதிலும், பெண்களின் உரிமைகள் பேச்சளவில் மாத்திரம் இருக்கக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் தற்போது தேவையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த விடயங்கள் அனைத்தையும் தேசியப் பொறுப்பாகக் கருதி நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்கு தெளிவூட்டுமாறு வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவ்வாறு அல்லாமல் இந்தச் சட்டங்கள் விதிமுறைகளைக் கொண்டு வருவது மாத்திரம் போதுமானதாக இருக்காது என்றும் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத் தேசிய கொண்டாட்டம் “அவளுக்கான பலம் – நாட்டுக்கான முன்னேற்றம்” என்ற தொனிப்பொருளில் பெருமையுடன் நடைபெற்றதுடன், நாடளாவிய ரீதியில் இருந்து பெண்கள் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான பெண்கள் இதில் கலந்துகொண்டனர்.
தற்காலிக பெண்கள் பராமரிப்பு நிலையங்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பெண்கள் பணி அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அதிகார சபைகளின் யாப்பு என்பன, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.
தற்காலிக பெண்கள் பராமரிப்பு நிலையங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியின் கீழ் முச்சக்கர வண்டிகள், கணனிகள், அச்சு இயந்திரங்கள் என்பனவும் இதன்போது அடையாள ரீதியில் வழங்கிவைக்கப்பட்டன.
அழகுக் கலை சார்ந்த கற்கைகளுக்கும் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
ஒழுங்குபடுத்தப்படாத துறைகளில் இருந்து பெறப்படும் நுண் நிதிக் கடன்களின் சுமையிலிருந்து விடுபடுவதற்காக வழங்கப்படும் “லிய சவிய” கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் நிகழ்வும் அடையாள ரீதியில் இங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும், பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டின் கீழ், நீர்கொழும்பு, போலவலான, குட் ஷெப்பர்ட் கான்வென்ட் நடத்திய NVQ 3 நிலை தாதியர் பராமரிப்பு சேவை தொழில்முறை பயிற்சி நெறியை வெற்றிகரமாக முடித்த இளம் பெண்களுக்கு சான்றிதழ்களும் இதன்போது வழங்கப்பட்டன.
சர்வதேச மகளிர் தின தேசிய கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய முழுமையான உரை,
சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடுவது என்னும்போது, விழா நடத்துவதும், பெண்களின் உரிமைகள் பற்றி பேசிவிட்டு வீடு திரும்புவதும்தான் வழமையாக நடக்கிறது. இது ஒவ்வொரு வருடமும் நடக்கும். ஆனால் இந்த முறை அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்காக குரல் எழுப்புவதை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
கடந்த ஆண்டு, பாராளுமன்றத்தில், மகளிர் மன்றத்தை சந்தித்தபோது, பெண்களுக்குத் தேவையான சட்டமூலங்களைத் தயாரிக்கும்படி அவர்களிடம் கேட்டேன். அதில் இரண்டு முக்கிய சட்டமூலங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் பெண்களை வலுவூட்டும் சட்டமூலம். அதற்காகத் தனி ஆணைக்குழுவை நியமிக்க எதிர்பார்க்கின்றோம்.
அரசியலமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பொறிமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்களின் மேம்பாடு மற்றும் வலுவூட்டலுக்கான ஏற்பாடுகளை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய கொள்கை ஒன்றைத் தயாரிக்கும்போது, அந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும்.
இந்த வரைவு நேற்றைய தினம் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. மேலும், மற்றொரு வரைவு அடுத்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்படும். அதுதான் ஆண்,பெண் சமூக சமத்துவச் சட்டமூலம்.
இதன் மூலம் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு சமூக, அரசியல், பொருளாதார, கலாசார, தொழில்நுட்பக் கொள்கைகளைத் தயாரிக்கும்போது ஆண்,பெண் சமூக சமத்துவக் கொள்கைகளை நிறுவுதல் மற்றும் அதற்குத் தேவையான வசதிகளை வழங்குகிறது.
மேலும், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்குரிய அதிகாரங்களுடன் ஆண்,பெண் சமூக சமத்துவம் தொடர்பான சபையொன்றை நிறுவுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், ஆண்,பெண் சமூக சமத்துவ மத்திய நிலையத்தை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் அந்த நிறுவனத்தின் மூலம் அமைச்சு மட்டத்தில் முன்வைக்கப்படும் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் செயல்படுத்தப்படும்போது, பெண்களுக்கான இரண்டு வலுவான நிறுவனங்கள் உருவாக்கப்படும். இப்போது பெண்களின் உரிமைகள் வெறும் பேச்சளவில் மாத்திரம் நின்றுவிடாது. அதற்குத் தேவையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும். பல ஆண்டுகளாக நாங்கள் அதைச் செய்யவில்லை. இன்று நாம் அந்தப் பணிகளைச் செய்கிறோம்.
இதைப் பற்றி ஏனைய குழுக்களுடன் கலந்துரையாடி மேலும் திருத்தங்கள் தேவைப்பட்டால் தெரிவிக்க பாராளுமன்றத்தின் மகளிர் மன்றத்திற்கு பொறுப்பளிக்கிறேன். ஏப்ரல் புத்தாண்டு காலத்திற்குப் பிறகு அந்த திருத்தங்களை எமக்கு அறிவிக்க வேண்டும். மே மாதத்தில், இந்த இரண்டு சட்ட மூலங்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் இத்துடன் நிறைவடைவதில்லை. நாம் அறிமுகப்படுத்திய இந்த இரண்டு சட்டமூலங்களும் எமது பிராந்தியத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தெற்காசியாவில் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற சட்டங்கள் இருக்காது என்று நினைக்கிறேன்.
அதன் பிறகு ஆண், பெண் சமூக சமத்துவ அடிப்படையிலான வரவுசெலவுத் திட்டத்தை அமுல்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், திறைசேரி செயலாளருடன் கலந்தாலோசித்து வரைவை முன்வைப்போம் என நாம் எதிர்பார்க்கின்றோம். ஆசியாவிலேயே முதன்முறையாக இது நடைபெறுகிறது. கனடா உட்பட இரண்டு மூன்று நாடுகளில் மாத்திரமே இது நடைபெற்றுள்ளது.
நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது குறித்து அறிக்கை தயாரித்தேன். 2018 ஆம் ஆண்டில் இதனை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டிருந்த போதிலும் எங்களால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. அதன் பின்னர், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலால், அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை.
பாராளுமன்ற மகளிர் மன்றத்தை அழைத்து இதுபற்றிக் கலந்துரையாடி, மேலும் திருத்தங்கள் தேவைப்பட்டால் அதனுடன் இந்தச் சட்டத்தையும் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். இதுவே பெண்களுக்காக நாங்கள் எடுத்துள்ள முதல்படி ஆகும். இதுமட்டுமின்றி இன்று தற்காலிக மகளிர் பராமரிப்பு மையங்களுக்கான தேசிய வழிகாட்டுதல்களை முன்வைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க,
உலகில் பெண்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒரு நாளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் வருடத்தில் 365 நாட்களும் அவளுக்கு மரியாதையும் பலமும் கொடுக்கப்பட வேண்டும். பெண்கள் காலூன்றி நிற்கும் வகையில் பொருளாதாரம் வலுப்பெற வேண்டும்.
இன்று நாட்டின் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் பெண்களே பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால் பல்கலைக்கழகக் கல்வியை முடித்து, திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்ற பிறகு, அவர்களின் பயணம் நிறுத்தப்படுகிறது. குழந்தைகளைப் பெற்றெடுப்பதும், தாயாகுவதும் விலைமதிப்பற்றது. ஆனால் அவர்களின் பயணம் இதோடு நின்றுவிட வேண்டியதில்லை.
நம் நாட்டிற்கு அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவது பெண்கள்தான் என்பதைப் பெருமையுடன் நினைவுகூர வேண்டும். மேலும் விவசாயத் தொழில்துறை, ஆடைத் தொழிலில் பெண்களே அதிக பங்களிப்பு செய்கின்றனர். இந்த நாட்டில் 52% பெண்கள், ஆனால் அவர்களின் அரசியல் பங்களிப்பு 6% மாத்திரமே.
பாராளுமன்றத்தை 13 பெண்கள் மாத்திரமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த நிலை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டும். ஒரு நாட்டின் அரசியலையும் பொருளாதாரத்தையும் மாற்றுவதன் மூலம் எதிர்காலத்தை தீர்க்கும் திறன் பெண்களுக்கு உள்ளது.
இந்நிலைமையை புரிந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெண்களுக்காக பல முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளார். அதன்படி இந்த ஆண்டு மகளிர் தினத்தில் பெண்களாகிய உங்களுக்கு சட்டத்தின் அதிகாரமும் பாதுகாப்பும் கிடைக்கின்றது.
களனிப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆண், பெண் சமூக சமத்துவக் கற்கை மையத்தின் பணிப்பாளருமான கலாநிதி அனுஷா எதிரிசிங்க இங்கு அதிதிகள் உரையை வழங்கினார்.
அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த், பவித்ரா வன்னியாரச்சி, மனுஷ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர்களான அனுப பஸ்குவல், சீதா அறம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, கொழும்பு முன்னாள் மேயர், உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் ரோசி சேனாநாயக்க, வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அரச மற்றும் அரசு சாரா பிரதிநிதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள், நாடளாவிய ரீதியில் இருந்து பெண்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.