கொடைக்கானலில் உள்ள குணா குகையில் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.
கேரளாவின் மஞ்சும்மல் பகுதியிலிருந்து கொடைக்கானலுக்குச் சுற்றுலா வரும் நண்பர்களில் ஒருவர், குணா குகையில் சிக்கிக் கொள்கிறார். அவரை எப்படி மீட்டார்கள் என்பதுதான் கதை.
சிதம்பரம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதை தமிழ்நாட்டில் நடப்பதால் இங்கும் நன்றாக ஓடுகிறது. படத்தில் இடம் பெறும் குணா படத்தின் ‘கண்மணி அன்போடு’ பாடலுக்கு இப்போதும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்தப் படக்குழுவை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் படக்குழுவைப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தப் படம் தமிழ்நாட்டிலும் வசூல் குவித்துவருகிறது. இதுபற்றி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க செயலாளர் திருச்சி ஸ்ரீதரிடம் கேட்டபோது, “கடந்த வாரமும் இந்த வாரமும் வெளியான எந்த தமிழ்ப் படத்துக்கும் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்கு நேற்று 30 ஸ்கிரீன்ஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழில் வசூல் குவித்து வருகிறது” என்றார்.