திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற இல்மனைட் அகழ்வினைத் தடைசெய்யக்கோரி இன்று வெள்ளிக்கிழமை (1) பிரதேச பொதுமக்கள் பிரதேச செயலகத்தின் முன்னால் ஆர்பாடத்தில் ஈடுபட்டனர்.
இல்மனைட் அகழ்வுக்கு தடைசெயயப்பட்டிருந்த நிலையில் தடையை மீறி மீண்டும் அகழ்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதை அறிந்த மக்கள் ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து இன்று காலை திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்தின் முன்னால்; நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், தவராசா கலையரசன் மற்றும் முள்ளாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன், உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றினைந்தனர்.
இதன் போது இல்மனைட் அகழ்வினை உடன் நிறுத்து, எங்கள் வளம் எமக்கு வேண்டும், எங்கள் வளங்களைச் சுரண்டாதே, கொள்ளையர்களே வெளியேறு, இல்மனைட் அகழ்வைத் தடை செய் போன்ற சுலோகங்கள் ஏந்திவாறு கோசங்களை எழுப்பி அங்கிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக பிரதேச செயலகத்திற்கு முன்னால் சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அங்கு சென்ற பிரதேச செயலாளரிடம் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வு மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் பிரதேச மக்களின் எதிர்ப்பின் காரணமாக பிரதேச அபிவிருத்திக் குழு மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தீர்மானங்களுக்கு அமைய தடை செய்யப்பட்டிருந்தது.
தற்போது அத்தீர்மானங்களை மீறி மீண்டும் இவ் அகழ்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதை நிறுத்தவேண்டும். என கோரி மகஜர் ஒன்றை கையளித்தனர். இதன்போது பிரதேச செயலாளர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நிலவுகின்ற இந்த பிரச்சனை தொடர்பில் பிரதேச சபையோ, பிரதேச செயலகமோ எவ்வித அனுமதியும் இதுவரை வழங்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் இதற்கு முன்னரும் மக்களால் மகஜர் வழங்கப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இன்று வழங்கப்பட்ட மகஜர் தொடர்பிலும் மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரதேச செயலாளரின் உறுதிமொழியையடுத்து ஆர்பாட்ட காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.
கனகராசா சரவணன்