கமலின் குணா திரைப்படம் படம்பிடிக்கப்பட்ட மலைக்குகையில் படமாக்கப்பட்டிருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் மலையாள இயக்குநர் கமல்ஹாசனை புகழ்ந்து பேசியுள்ளார்.
தமிழ் ரசிகர்கள் சிறந்த படங்கள் வந்தா கொண்டாட தவறியதே இல்லை. அதிலும் மலையாள திரைப்படங்கள் நன்றாக இருந்துவிட்டால் போதும் நிச்சயம் கொண்டாடி, சிலாகித்து தள்ளிவிடுவார்கள். அப்படிதான், அந்த வரிசையில் இணைந்துள்ளது மலையாள திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம், தமிழ்நாட்டின் கொடைக்கானல் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதை என்பது தான். குறிப்பாக, குணா குகை பகுதியில் நடந்த சம்பவம் இது.
‘மஞ்சும்மல் பாய்ஸ்’படத்தின் ட்ரெய்லரிலேயே கண்மணி அன்போடு காதலன் பாடலின் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல என்ற வரிகளை படத்தில் வரும் இளைஞர்கள் பாடுவதுபோல் வரும். அதோடு, கமலின் குரலிலும் ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும். அப்போது, இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடையே எக்கச்செக்கமாக எகிறியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறது.
படம் பார்த்த ரசிகர்கள் அப்படி கொண்டாடி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் சிதம்பரம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட மலையாளத்தில் சில முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். தமிழ் சூழலில் படத்தின் பெரும்பகுதி நடைபெறுவதால் ஜார்ஜ் மரியன், நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு படங்களில் நடித்த ராம சந்திரன் துரைராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானமஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு முதல் இரண்டு நாட்களுக்கு சுமாரான வரவேற்பு தான் கிடைத்தது. ஆனால், படம் குறித்து பாசிட்டிவ் ஆன கருத்துகள் வைரல் ஆகவே வார இறுதி நாட்களான 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் திரையரங்கு நிரம்பி வழிந்தது. 4 நாட்களில் இந்தப் படம் 36.11 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு முன்பு வந்திருந்த மம்முட்டியின் பிரம்மயுகம் மற்றும் பிரேமலு ஆகிய திரைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பிரம்மயுகம் 11 நாட்களில் 1.8 கோடியும், பிரேமலு 17 நாட்களில் 1.26 கோடியும் வசூல் செய்த நிலையில், மஞ்சும்மல் திரைபடம் 4 நாட்களிலேயே ரூ1.36 கோடி வசூலித்துள்ளது.