கனடாவில் மாயமான பாகிஸ்தான் விமான பணிப்பெண்..

‘நன்றி PIA’ – கடிதம் எழுதி வைத்துவிட்டு கனடாவில் மாயமான பாகிஸ்தான் விமான பணிப்பெண்.. தொடரும் சோகம்!

பாகிஸ்தானில் இருந்து கனடா நாட்டின் டொரன்டோ நகருக்கு கடந்த 26ஆம் தேதி, PK-782 என்ற எண் கொண்ட பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் விமானப் பணியாற்றிய மரியம் ரசா என்ற பணிப்பெண், விமானம் தரையிறங்கியதும் டொரன்டோ நகருக்குள் சென்றார். மறுநாள், கராச்சிக்குத் திரும்பும் PK-784 என்ற எண் கொண்ட பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு, அவர் பணிக்குத் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் தங்கியிருந்த அறை பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிகாரிகள் அறையைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது மரியம் ரசா தன்னுடைய சீருடையுடன், ’நன்றி பிஐஏ’ (பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்) என்று எழுதப்பட்ட குறிப்பும் இருந்துள்ளது. சுமார் 15 வருடங்கள் பாகிஸ்தான் ஏர்லைன்சில் பணியாற்றிய மரியம், மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்ப விருப்பமில்லாமல் கனடாவில் மாயமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மரியம் ரசாவோடு சேர்த்து இந்த ஆண்டில் இரண்டு பாகிஸ்தான் விமானப் பணிப் பெண்கள் காணாமல் போயிருக்கிறார்கள். கடந்த மாதம், ஃபாசியா முக்தார் என்ற பணிப்பெண் கனடாவில் தரையிறங்கியபின் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதுபோன்று கனடாவில் தரையிறங்கும் பாகிஸ்தான் விமானப் பணிப் பெண்கள் 2019ஆம் ஆண்டுமுதல் காணாமல் போவதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும், பாகிஸ்தானைச் சேர்ந்த 7 விமானப் பணிப் பெண்கள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டொரண்டாவில் தரையிரங்கிய மூத்த பணிப் பெண்களான காலித் மெஹ்மூத் மற்றும் ஃபெடா ஹுசைன் ஆகியோர் மீண்டும் பாகிஸ்தான் திரும்பவில்லை என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதுபோல் பணியின்போது தவறி விழுந்த பணியாளரும் கனடாவிலேயே ஐக்கியமாகி விட்டார்.

மரியம் போன்ற பல பணிப்பெண்கள் அடுத்தடுத்து கனடாவிற்குள் நுழைந்து தங்களைக் குறித்த தகவல்களை எவருக்கும் தெரிவிக்காமல் வாழ்கின்றனர். புகலிடம் தேடி வருவோரை ஆதரிக்கும் வகையில் கனடாவின் குடியுரிமைச் சட்டங்கள் உள்ளதே இதற்கு காரணம் என பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர், “சில ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் மாயமான ஒரு விமான பணிப்பெண், இப்போது கனடாவில் நிரந்தரமாக குடியேறி உள்ளார். புகலிடம் கோரும் மற்ற பணிப்பெண்களுக்கு அவர் ஆலோசனை அளிக்கிறார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் தரப்பில் கனடா அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *