‘கேப்டன் மில்லர்’ படத்தினை தொடர்ந்து தனது 50 வது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார் தனுஷ். ‘ராயன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார் தனுஷ். இதனால் ரசிகர்கள் மத்தியில் ‘ராயன்’ மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தனுஷின் 50 வது படமான ராயனில் நடிக்கும் நடிகர்கள் குறித்தான அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து சத்தமே இல்லாமல் ‘ராயன்’ படத்தை தனுஷ் இயக்கி முடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் தனுஷ், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி முத்திரை பதித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வரும் தனுஷ், ஹாலிவுட் வரை சென்று விட்டார். கடைசியாக இவரது இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகி இருந்தது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடப்பதை போன்று படமாக்கப்பட்டு இருந்தது. ஒடுக்கப்பட்டவர்களின் கோயில் நுழைவு உரிமை போராட்டத்தை முக்கிய கதைக்களமாக கொண்டு வெளியாகி சக்கை போடு போட்டது ‘கேப்டன் மில்லர்’.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 50 படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இயங்கி விட்டார் தனுஷ். ஏற்கனவே ‘பவர் பாண்டி’ என்ற பீல்குட் படத்தை இயக்கிய தனுஷ், நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது 50 வது படத்திற்காக மீண்டும் இயக்குனர் அரிதாரம் பூசியுள்ளார். இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற வைத்து வருகிறது.
முதலில் ‘ராயன்’ படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் இருப்பதை போன்ற மிரட்டலான போஸ்டர் வெளியானது. இதனையடுத்து எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி, சரவணன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிப்பதாக தனித்தனியாக போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார் தனுஷ்.
இந்த மிரட்டலான ஸ்டார் கேஸ்ட்டே ‘ராயன்’ படத்தின் அதகளமான வெற்றியை உறுதி செய்துவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். நிச்சயமாக தனுஷ் தனது 50 வது படத்தில் தரமான சம்பவம் செய்வார் என்றும், ஒரு முடிவோடு தான் இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் ராயனை இயக்கியுள்ளார் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.